ஹைதராபாத்: ஒய்.எஸ்.ஆர் தெலங்கானா கட்சித்தலைவர் ஷர்மிளா போலீஸாரை தாக்கியதாக நேற்று முன்தினம் மாலை கைது செய்யப்பட்டு, செஞ்சல்கூடா சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு நேற்று நாம்பல்லி நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது. இதனை தொடர்ந்து ஹைதராபாத்தில் நேற்று மாலை ஷர்மிளா செய்தியாளர்களிடம் கூறியதாவது:
சந்திரசேகர ராவ் 9 வருடங்கள் முதல்வராக இருந்து என்ன பயன்? வீட்டிற்கு ஒருவருக்கு வேலை, மகளிருக்கு இட ஒதுக்கீடு, ஏழைகளுக்கு 2 படுக்கை அறை வீடு உள்ளிட்ட வாக்குறுதிகள் என்னவானது? இதையெல்லாம் எதிர்க்கட்சிகள் கேள்வி கேட்டால் அவர்களை அடக்கி சிறையில் அடைக்கும் வேலையைத்தான் அவர் செய்து வருகிறார்.
தெலங்கானா பப்ளிக் சர்வீஸ் கமிஷன் தேர்வில் நடந்த முறைகேடு குறித்து, அதனை விசாரிக்கும் சிறப்பு குழுவுக்கு மனு கொடுக்க நான் மட்டும் தனியாக சென்றேன். ஆனால், அதற்கு அனுமதிக்காததுடன், பெண் என்றும் பாராமல் ஆண் போலீஸார் என்னை தள்ளிவிட்டு அத்துமீறி நடந்துகொண்டனர். 2 பெண் போலீஸார் என் விரலை உடைக்க முயற்சித்தனர். நான் என்னை பாதுகாத்து கொள்ளவே போலீஸாரை தள்ளி விட்டேன். ஆனால் நான் அவர்களை அடித்தது போல் சமூக வலைதளங்களில் போலீஸாரே சில போலி வீடியோக்களை வெளியிட்டனர். இவ்வாறு ஷர்மிளா கூறினார்.