தேனி மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற அருள்மிகு வீரபாண்டி கௌமாரியம்மன் கோவில் திருவிழா ஆண்டுதோறும் சித்திரை மாதம் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு சித்திரை மாத திருவிழா வரும் மே 9ம் தேதி முதல் 16ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த திருவிழாவானது ஒரு வார காலம் நடைபெறும் என்பதால் திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேர்வோட்டம் வரும் மே 12ஆம் தேதி நடைபெற உள்ளது.
அன்றைய தினம் தேனி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்களுக்கும் கல்வி நிறுவனங்களுக்கும் 12.05.2023 வெள்ளிக்கிழமை அன்று உள்ளூர் விடுமுறை அளிப்பதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அந்த நாளை ஈடு செய்யும் வகையில் 27.05.2023 அன்று வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று தேனி மாவட்டம் உத்தமபாளையம் வட்டம் மேல கூடலூர் தெற்கு கிராமத்தில் தமிழ்நாடு கேரள எல்லையில் குமுளி அருகே அமைந்துள்ள மங்களதேவி கண்ணகி கோவிலில் சித்ரா பௌர்ணமி திருவிழா ஆண்டுதோறும் வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் வரும் 05.05.2023 அன்று கோவிலில் திருவிழா நடைபெற உள்ளதால் தேனி மாவட்டத்திற்கு 05.05.2023 அன்று வெள்ளிக்கிழமை தேனி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிப்பதாக தேனி மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.