21ஆம் நூற்றாண்டுக்கு ஏற்ற கல்வி முறையை உருவாக்கி, சர்வதேசத்தில் இலங்கையின் பெயரை உயர்ந்த நிலையில் வைக்கப்படும் – மாத்தறை ராகுல கல்லூரியில் ஜனாதிபதி தெரிவிப்பு
நாட்டின் கல்வி முறையை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ சீர்குலைக்க எவருக்கும் இடமளிக்க முடியாது எனவும் தேவைப்பட்டால் அதற்கு எதிராக சட்டங்கள் கொண்டு வரப்படும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் கல்வி தொடர்பான புதிய அமைச்சரவைக் குழுவொன்று நியமிக்கப்பட்டதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, அதில் தானும் கல்வி அமைச்சர் உள்ளிட்ட அமைச்சர்கள் சிலரும் உள்ளடங்குவதாகவும் அவர் தெரிவித்தார்.
மாத்தறை ராகுல கல்லூரியின் நூற்றாண்டு விழாவில் (25) காலை கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நூற்றாண்டு விழாவுடன் இணைந்ததாக வித்யாபிமானி கல்விக் கண்காட்சியம் கலை விழாவும் மூன்று நாட்கள் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாத்தறை ராகுல கல்லூரியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நினைவு முத்திரை ஒன்றும் வெளியிடப்பட்டது.
பாடசாலை அதிபர் மேஜர் சுதத் சமரவிக்ரமவினால் ஜனாதிபதிக்கு நினைவுப் பரிசில் வழங்கப்பட்டதுடன், நூற்றாண்டுக்கான “ராஹல் நூற்றாண்டு பிரதாப” ஞாபகார்த்த சஞ்சிகையும் வெளியிடப்பட்டது.
மாணவர் யோனல் ரொட்ரிகோவினால் அதே இடத்தில் வரையப்பட்ட ஜனாதிபதியின் உருவப்படமும் இதன்போது ஜனாதிபதியிடம் வழங்கப்பட்டது..
இந்நிகழ்வில் மேலும் உரையாற்றிய ஜனாதிபதி,
நாட்டின் எதிர்காலம் கல்வியினால் தீர்மானிக்கப்படுவதாகவும், 21ஆம் நூற்றாண்டுக்கு உகந்த கல்வியை நாட்டின் பிள்ளைகளுக்கு வழங்குவதற்கு அனைவரும் தங்களை அர்ப்பணிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். 2048 ஆம் ஆண்டளவில் அபிவிருத்தியடைந்த இலங்கையை கட்டியெழுப்பும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தில் கல்வி தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும், 2035 ஆம் ஆண்டளவில் நாட்டில் புதிய கல்வி முறையை உருவாக்குவதே அரசாங்கத்தின் அபிலாஷை எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
எதிர்காலத்தில் கல்வியை நவீனமயப்படுத்துவதற்கு அரசாங்கம் பெருமளவு பணத்தைச் செலவிடத் தயாராக இருப்பதாகத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நாட்டின் மிக முக்கியமான தேசிய வளம் இளைஞர்கள் என்றும், எதிர்கால சந்ததியினருக்கு முறையான கல்வியை வழங்குவதன் மூலம் இலங்கையை இந்து சமுத்திரத்திரத்தில் பிரதான கேந்திர மையமாக மாற்ற முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.
காலநிலை மாற்றத்தை ஒரு பாடமாக மாற்றவும், புதிய வரலாற்று நிறுவனத்தை நிறுவவும் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. பாடசாலை பாடத்திட்டம் மற்றும் பல்கலைக்கழக கல்வியில் புதிய பாடங்கள் அறிமுகப்படுத்தப்படும். அத்தோடு அனைத்து மாணவர்களும் அறிவியல் மற்றும் கலை பாடங்களை படிக்க வேண்டும்.
மேலும், புவியியல், வரலாறு போன்ற பாடங்களை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என்றும், முதலில் உயர்தரப் பாடங்கள் நடைபெறும் அனைத்துப் பாடசாலைகளும் இணையத்துடன் இணைக்கப்படும் என்றும், அதன்பின்னர் க.பொ.த சாதாரண தரம் வரை கல்வி கற்பிக்கப்படும் அனைத்துப் பாடசாலைகளுக்கும் இணைய வசதி வழங்கப்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
எதிர்வரும் 10 வருடங்களுக்குள் அனைத்துப் பாடசாலைகளிலும் ஆங்கிலக் கல்வியை வழங்குவதற்கும் ஆசிரியர்களை ஆட்சேர்ப்பில் ஆங்கிலத்தை கட்டாயமாக்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
அமைச்சர் காஞ்சன விஜேசேகர, இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார, ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகர் மற்றும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, தென் மாகாண ஆளுநர் விலி கமகே, தபால்மாஅதிபர் ருவன் சரத்குமார, மாத்தறை ராகுல் கல்லூரியின் அதிபர் மேஜர் சுதத் சமரவிக்ரம உள்ளிட்ட ஆசிரியர்கள் பழைய மாணவர்கள், உட்பட பலர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.