மும்பை: இந்திய பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானி, தனது ஊழியர் ஒருவருக்கு ரூ 1500 கோடி மதிப்பில் 22 அடுக்குகளை கொண்ட மாடி வீட்டை பரிசாக கொடுத்துள்ளார்.
இந்திய பணக்காரர்களுள் ஒருவரான முகேஷ் அம்பானியின் செயலுக்கு அனைவரும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள். பணம் இருந்தால் குணம் இருக்காது, குணம் இருந்தால் பணம் இருக்காது என சொல்வார்கள். மேலும் பணமும், குணமும் இருந்தாலும் மற்றவர்களுக்கு செய்யும் மனம் இருக்காது.
ஆனால் முகேஷ் அம்பானி சொத்து அளவில் மட்டுமல்ல, மனதளவிலும் பணக்காரர் என நிரூபித்துவிட்டார். தனது நிறுவனத்தில் பணியாற்றும் ஒரு ஊழியருக்கு ரூ 1500 கோடி மதிப்பிலான 22 அடுக்குகளை கொண்ட வீட்டை அன்பளிப்பாக கொடுத்துள்ளார்.
இந்த விலை மதிப்புள்ள வீட்டை பெற்றவர் வேறு யாருமில்லை முகேஷ் அம்பானியின் நண்பரும், அவருடைய ரைட் ஹேண்டுமான மனோஜ் மோடிதான். இவர் அம்பானி குடும்ப உறுப்பினர்களுக்கு நெருக்கமானவர். முகேஷுடன் சேர்ந்து மும்பை பல்கலைக்கழகத்தில் கெமிக்கல் டெக்னாலஜி படித்தார்.
படித்து முடித்ததும் ரிலையன்ஸ் குழுமத்தில் ஒரு அங்கமாக இருந்து வருகிறார். முகேஷ் அம்பானியின் தந்தை திருபாய் அம்பானி ரிலையன்ஸ் நிறுவனத்தை தொடங்கிய போதிலிருந்தே அங்கு பணியில் இருக்கிறார் மனோஜ் மோடி. கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கும் மேலாக அம்பானி குடும்பத்துடன் இணைந்து பணியாற்றி வருகிறார்.
திருபாய் அம்பானி, அவருடைய மகன் முகேஷ் அம்பானியை தொடர்ந்து அம்பானி குடும்பத்தின் மூன்றாவது தலைமுறையினரான ஆகாஷ் அம்பானிக்கும் இஷா அம்பானிக்கும் வழிகாட்டி வருகிறார்.ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ரிலையன்ஸ் ரீட்டைல் நிறுவனத்தின் இயக்குநராக இருக்கிறார். ரிலையன்ஸ் நிறுவனத்தில் பில்லியன் டாலர் மதிப்பிலான அனைத்து ஒப்பந்தங்களும் வெற்றியடைய மூளையாக இருப்பவர் மனோஜ் மோடி ஆவார்.
இதற்காக தற்போது ரூ 1500 கோடி மதிப்பிலான 22 மாடிகளை கொண்ட பங்களாவை மனோஜ் மோடிக்கு அன்பளிப்பாக கட்டிக் கொடுத்துள்ளார் முகேஷ் அம்பானி. மும்பையில் ஏதோ ஒரு இடத்தில் அவர் கட்டிக் கொடுக்கவில்லை. தான் வசித்து வரும் பகுதியில் நேபியன் கடல் சாலையில் இந்த பங்களாவை முகேஷ் கட்டிக் கொடுத்துள்ளார். இந்த பகுதி மும்பையின் ப்ரீமியம் பகுதி என அழைக்கப்படும். இங்கு ஏராளமான பணக்காரர்கள் வசித்து வருகிறார்கள்.
மனோஜ் மோடிக்கு 1.7 லட்சம் சதுர அடி கொண்ட ரூ 1500 கோடி மதிப்பிலான வீட்டின் ஒவ்வொரு தளமும் சுமார் 8000 சதுர அடியில் கட்டப்பட்டுள்ளது. இந்த வீட்டிற்கு கிறிஸ்டென்ட் விருந்தாவன் என பெயரிடப்பட்டுள்ளது. மனோஜ் மோடியின் குடும்பத்தினரின் விருப்பப்படியே இந்த வீடு கட்டி கொடுக்கப்பட்டுள்ளது. கட்டடத்தின் முதல் 7 தளங்களில் கார் பார்க்கிங் இருக்கிறது.
14 ஆவது தளத்தில் மனோஜ் மோடியின் அலுவலகமும் 15 ஆவது தளத்தில் மருத்துவமனை அமைப்பில் சுகாதார தளம் ஒன்றும் இடம்பெற்றுள்ளது. இது தவிர விளையாடுவதற்கு வசதி, ஸ்பா, பார்ட்டி அறைகள், நீச்சல் குளம், தியேட்டர்கள் என அனைத்து வசதிகளும் இந்த பங்களாவில் உள்ளன. இந்த வீட்டிற்கு 175 பணியாளர்கள், இஸ்ரேல் நிறுவனத்தின் பாதுகாப்பு படையினர் உள்ளனர். இந்த வீட்டிற்கு தான் குடிபெயர்ந்த நிலையில் இதற்கு முன்னர் தான் வசித்த இரண்டு அடுக்குமாடி குடியிருப்பை ரூ 41.5 கோடிக்கு விற்பனை செய்துள்ளார்.
இந்த வீடு இருக்கும் பகுதியில் ஜேஎஸ்டபிள்யூ குரூப் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் சஜ்ஜந் ஜிந்தால் வசித்து வருகிறார். இங்கு பொதுவாக ஒரு சதுர அடி ரூ 45,100 முதல் ரூ 70,600 க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த வீட்டை வடிவமைத்தவர்கள் டலாடி மற்றும் பார்ட்னர்ஸ் எல்எல்பி ஆவார். இந்த வீட்டில் போடப்பட்டுள்ள பர்னிச்சர்கள் இத்தாலியில் இருந்து கொண்டு வரப்பட்டன.