பயங்கரம்.. மாவோயிஸ்ட் நிகழ்த்திய கொடூர தாக்குதல்.. 11 போலீஸார் உடல் சிறதி பலி.. அலறும் சத்தீஸ்கர்

ராய்ப்பூர்:
சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் நிகழ்த்திய பயங்கர வெடிகுண்டு தாக்குதலில் 11 போலீஸார் உயிரிழந்திருப்பது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

சத்தீஸ்கரில் கடந்த சில ஆண்டுகளாக அடங்கி இருந்த நக்சல் தீவிரவாதம், மீண்டும் தலைதூக்கி இருப்பதையே இந்த சம்பவம் காட்டுகிறது.

சத்தீஸ்கர் மாநிலம் பஸ்தார் மாவட்டத்தில் அரன்பூர் பகுதியில் மாவோயிஸ்ட் தீவிரவாதிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில், இன்று மதியம் 3 மணியளவில் வேன் ஒன்றில் 10 போலீஸார் அந்தப் பகுதிக்கு சென்று கொண்டிருந்தனர்.

இந்நிலையில், அவர்களின் வேன் அரன்பூருக்குள் நுழைந்த அடுத்த நொடி, சக்திவாய்ந்த குண்டுவெடித்தது. இதில் போலீஸ் வேன், பல அடி தூரம் உயரே பறந்து கீழே விழுந்து தீப்பிடித்தது. இந்தக் கொடூரத் தாக்குதலில் வேனில் இருந்த 10 போலீஸார் மற்றும் 1 டிரைவர் என 11 பேர் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர். உயிரிழந்த 10 போலீஸாரும் மாவட்ட ஆயுதப்படையை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.

இந்த தாக்குதல் குறித்து தகவல் தெரியவந்ததும், அங்கு ஏராளமான போலீஸார் மற்றும் சிஆர்பிஎப் படையினர் வந்து இறந்து கிடந்த போலீஸாரின் உடல்களை மீட்டனர். மேலும், அந்தப் பகுதியில் ஆய்வு செய்ததில் ஐஇடி வகை வெடிகுண்டை பயன்படுத்தி இந்த தாக்குதலை மாவோயிஸ்டுகள் நடத்தி இருப்பது கண்டறியப்பட்டது. பூமியில் புதைக்கப்பட்டிருந்த அந்த வெடிகுண்டை, சரியாக வேன் அங்கு செல்லும் போது ரிமோட் மூலமாக மாவோயிஸ்டுகள் அதை வெடிக்கச் செய்திருப்பதாக சிஆர்பிஎப் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்நிலையில், இந்த தாக்குதலை அரங்கேற்றிய மாவோயிஸ்ட் தீவிரவாதிகளை பிடிக்கும் பணியில் சிஆர்பிஎப் படையும், போலீஸாரும் ஈடுபட்டு வருகின்றனர். பஸ்தார் மாவட்ட எல்லைகளில் சீல் வைத்துள்ள போலீஸார், தீவிர வாகனத் தணிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இதனிடையே, இந்த தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாஹெல், இந்த தாக்குதலை நிகழ்த்தியவர்களுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் எனக் கூறியுள்ளார். இந்த தாக்குதல் சம்பவம் நடந்த அடுத்த சில நிமிடங்களில், முதல்வர் பூபேஷ் பாஹெலை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தொலைபேசியில் தொடர்புகொண்டு நிலவரத்தை கேட்டறிந்தார்.

இந்த சூழலில், தாக்குதல் நடத்தப்பட்ட பஸ்தார் மாவட்டத்துக்கு 500-க்கும் மேற்பட்ட சிஆர்பிஎப் படையினர் விரைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று இரவுக்குள் தாக்குதல் நடத்திய மாவோயிஸ்டுகளை உயிருடனோ அல்லது பிணமாகவோ பிடிக்க அவர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.