அமைச்சர் பழனிவேல் தியாகரஜன் பேசிய பல ஆடியோக்கள் வெளிவர உள்ளதாக பாஜக தெரிவித்துள்ளது.
மதுரை பள்ளியில் 5 ஸ்மார்ட் வகுப்புகளை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வைத்தார்
பிடிஆர் விவகாரம்
தமிழகத்தில் இன்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் (PTR) தான் பேசு பொருளாக மாறியுள்ளார்.
தலைமையின் குடும்பத்தினர் கட்டுக் கட்டாக சம்பாதித்து வருவதாக அமைச்சர் பிடிஆர் பேசியதாக வைரான ஆடியோதான் பெருத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. முக்கியமாக முதல்வர் முக ஸ்டாலினின் மகனும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினும், முதல்வரின் மருமகன் சபரீசனையும் குறிவைத்து, திமுக ஆட்சிக்கு வந்ததற்கு பின் இவர்கள் பல கோடி ரூபாய் சம்பாதித்துள்ளதாக பிடிஆர் பேசியதாக அந்த ஆடியோவில் கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பெரும் புயலை கிளப்பிய இந்த ஆடியோவை, பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் தான் முதலில் வெளியிட்டார். ஸ்டாலின் மகனும், மருமகனும் அவர்களின் மூதாதையர்களை காட்டிலும் அதிகளவு சம்பாதித்து விட்டனர் என்பதை அமைச்சரே ஒப்புக் கொண்டு விட்டார் என அந்த ஆடியோ சமூக வலைதளங்களில் பெரும் வைரலானது. ஆனால் இதற்கு உடனே மறுப்பு தெரிவிக்காத அமைச்சர், நிலமை சீரியஸான பின்பு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட ஆடியோ என தெரிவித்தார்.
சம்பவம் செய்யும் அண்ணாமலை
ஆனால் இதை கையிலெடுத்த பாஜக தலைவர் அண்ணாமலை, தனது சார்பாக ஒரு குழுவை அனுப்பி ஆளுநரிடம் புகார் மனு அளித்தார். அதேபோல் பிடிஆரையும் பொளந்து கட்டினார். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டதாக கூறும் அமைச்சர் அது உண்மை என்றால், நான் பேசுகிற மாதிரி ஆடியோக்களை வெளியிட வேண்டும் என கூறியதோடு மட்டுமில்லாமல், முதல்வர் ஸ்டாலினுக்கு அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்தார்.
இதுவரை அமைச்சர் பிடிஆர் பேசுவதை போல் இரண்டு ஆடியோக்கள் வெளியிடப்பட்டுள்ளன. ஏற்கனவே சில நாட்கள் முன்புதான் திமுக அமைச்சர்களின் சொத்துப்பட்டியலை வெளியிட்டு சம்பவம் செய்தார் அண்ணாமலை. அதைத் தொடர்ந்து தற்போது பிடிஆர் ஆடியோவை வைத்தும் ஸ்கோர் செய்துவருகிறார். இந்தநிலையில் இன்று இது குறித்து விளக்கம் அளித்த அமைச்சர், ‘‘திராவிட மாடல் ஆட்சியை சீர்குலைக்க பிளாக் மெயில் கும்பல் செய்யும் மோசடி இது. இந்த கோழைத்தனமான செயல் ஒருபோதும் இங்கு எடுபடாது.
பிளாக் பெயில் கும்பல்
அனைத்து அமைச்சர்களும் ஒன்றிணைந்து மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்தி வரும் நிலையில், நான் ஏன் அவர்களை குறைசொல்ல வேண்டும். இந்த ஜோடிக்கப்பட்ட ஆடியோக்கள் எங்கள் திமுக குடும்பத்தை எவ்விதத்திலும் பாதிக்காது. எங்கள் சாதனைகளை சகித்துக் கொள்ள முடியாத சில சக்திகள், எங்களை பிரிக்க இப்படியொரு மலிவான யுக்தியை கையில் எடுத்துள்ளனர்’’ என்று கூறினார்.
இன்னும் இருக்கு
இந்தநிலையில் அமைச்சரின் விளக்கத்திற்கு பாஜக எதிர்வினை ஆற்றியுள்ளது. இது குறித்து பாஜகவின் மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி தனது ட்விட்டர் பதிவில், ‘‘கோழைத்தனமான பதில், தயக்கத்துடன் பயத்தோடு கூடிய விளக்கம். இந்த மனிதரின் இயல்புக்கு எதிரான வசனம். இன்னும் சில ஆடியோக்கள் வெளிவரும் போது மேலும் கதை, திரைக்கதை, வசனத்தை எதிர்பார்க்கலாம்’’ என்று தெரிவித்துள்ளார். இதன் மூலம் இன்னும் பல ஆடியோக்கள் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.