மதுரை: பிரபல ஜல்லிக்கட்டு வீரர் ஜி.ஆர்.கார்த்தி தற்கொலை செய்து கொண்டார். இதனால் கிராம மக்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளார்கள்.
தமிழககத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் மிகவும் பிரபலமானவை. இவை மதுரை மாவட்டம் அலங்காநல்லூர், அவனியாபுரத்தில் ஆண்டுதோறும் தை மாதம் நடத்தப்படுகிறது.
இது அந்த காலத்தில் வீர விளையாட்டாக விளையாடப்பட்டு இதன் மூலம் பெண்கள் தங்கள் வாழ்க்கை துணையை தேர்வு செய்வார்கள். அத்தகைய வீர விளையாட்டு வீரம் விளைந்த மதுரையில் ஆண்டுதோறும் நடந்து வருகிறது.
மதுரை அவனியாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி. இவரது மகன்சி.ஆர்.கார்த்திக் (35). ஜல்லிக்கட்டு ஆர்வலரான இவர் தமிழ்நாடு ஜல்லிக்கட்டு இளைஞர் பேரவையிலும் நிர்வாகியாக இருந்தார்.
10 ஜல்லிக்கட்டு காளைகளை வளர்த்து வந்தார். இவருக்கு திருமணமாகி 6 மாத ஆண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் குடும்ப பிரச்சினையால் விரக்தியில் இருந்த அவர் தனக்கு தானே அவ்வப்போது உடலில் சிறு காயங்களை ஏற்படுத்திக் கொள்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். கடந்த வாரம் வீட்டிலுள்ள டிவி ஸ்டாண்டு, கண்ணாடியை உடைத்துள்ளார்.
அவருக்கு கை உள்ளிட்ட இடங்களில் காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. இதைத் தொடர்ந்து அவர் வேலம்மாள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது உடலை அவனியாபுரம் காவல் ஆய்வாளர் பார்த்தீபன் மீட்டு பிரேத பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
பிறது அவருடைய உடல் சொந்த ஊரான ராமநாதபுரம் மாவட்டம், அபிராமத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அவரது தந்தை ராமமூர்த்தி கொடுத்த புகாரின் பேரில் அவனியாபுரம் போலீலார் விசாரிக்கிறார்கள். இதுகுறித்து காவல் துறை கூறுகையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு கார்த்தி அடிமையாகியிருந்தார். போதையில் சுவற்றில் தலையை மோதிக் கொள்வது, வீட்டில் உள்ள பொருட்களை உடைப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்தார்.
கடந்த வாரம் கண்ணாடிகளை உடைத்து கையில் அறுத்துக் கொண்டதாக தெரிகிறது. இதன் மூலம் அதிகளவில் ரத்தம் வெளியேறி, மயக்கமடைந்த அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். எனினும் இதை சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்து விசாரிக்கிறோம் என போலீஸார் தெரிவித்தனர்.
கார்த்தியில் தந்தை ராமமூர்த்தி ஓபிஎஸ் அணியில் அமைப்புச் செயலாளராக இருந்து வருகிறார். இந்த நிலையில் கார்த்தி தற்கொலை சம்பவத்தை அறிந்த ஓபிஎஸ் மதுரை அரசு மருத்துவமனைக்கு வந்து அவருடைய உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். கார்த்தியின் காளை என்றாலே மாடுபிடிவீரர்கள் பிடிக்கவே அஞ்சுவார்கள். அந்த அளவுக்கு 10 காளைகளுக்கும் கார்த்தி பயிற்சி கொடுத்திருந்தார்.
தற்கொலை எந்தப் பிரச்சினையையும் தீர்க்காது. தற்கொலை எண்ணம் வந்தால் தற்கொலைத் தடுப்பு மையங்களைத் தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம். வாழ்வதற்கு புது நம்பிக்கை பெற சினேகா தொண்டு நிறுவனத்தின் 044 -24640060 ஹெல்ப்லைன் எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம். தமிழக அரசின் ஹெல்ப்லைன் நம்பர் 104-க்கும் தொடர்புகொண்டு பேசலாம்.