என்.ஆர்.காங்கிரஸ் – பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடைபெற்றுவரும் புதுச்சேரியில், காலாப்பட்டு தொகுதி பா.ஜ.க எம்.எல்.ஏ-வாக இருப்பவர் கல்யாணசுந்தரம். இன்று காலை சென்னை ராமாபுரத்தைச் சேர்ந்த எல்லம்மாள் என்ற பெண், கருவடிக்குப்பம் மாரியம்மன் கோயில் தெருவிலுள்ள எம்.எல்.ஏ கல்யாணசுந்தரம் வீட்டின் முன்பாக, தன்னுடைய இரண்டு குழந்தைகளுடன் வந்து தர்ணாவில் ஈடுபட்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய எல்லம்மாள், “புதுச்சேரியில் தற்போது பா.ஜ.க எம்.எல்.ஏ-வாக இருக்கும் கல்யாணசுந்தரமும் நானும் நான்கு ஆண்டுகளாகக் காதலித்தோம். 17.3.2008-ல் சென்னை வடபழனி கோயிலில் திருமணம் செய்துகொண்டோம்.
எங்களுக்குப் பெண் குழந்தை பிறந்து தாய் வீட்டில் இருந்தபோது, கல்யாணசுந்தரம் எனக்குத் தெரியாமல் இரண்டாவதாகத் திருமணம் செய்துகொண்டார். சில மாதங்களுக்குப் பிறகுதான் அந்த விஷயம் தெரிந்தது.
பிறகு, தான் தவறு செய்துவிட்டதாக என்னிடம் தெரிவித்தவர், `உன்னை நன்றாகப் பார்த்துக்கொள்கிறேன்’ என்று கூறி, புதுச்சேரிக்கு அழைத்து வந்தார். நான்கு ஆண்டுகள் இங்கு இருந்தேன். இரண்டாவதாக எங்களுக்குப் பையன் பிறந்ததும், இரண்டாம் மனைவி தரப்பிலிருந்து எனக்கு மிரட்டல்கள் அதிகமானதும் நான் சென்னைக்குச் சென்றுவிட்டேன். இப்போதும் அவருடைய இரண்டாவது மனைவி எங்களை மிரட்டிவருகிறார். குறிப்பாக, என் குழந்தைகளை அவர்கள் அப்பாவிடம் பேசக் கூடாது என்று மிரட்டுகிறார்.
தற்போது இரண்டாவது மனைவியின் பேச்சைக் கேட்டு அவர் என் வீட்டுக்கு வருவதில்லை. என்னுடைய குழந்தைகளையும் சரியாக கவனிப்பதில்லை. கடந்த 2018-ல் புதுச்சேரிக்கு வந்தபோது கல்யாணசுந்தரத்தின் இரண்டாவது மனைவியால் எனக்கு பாதிப்பு ஏற்பட்டது. அதையடுத்து தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத்திடமும் புகார் தந்தேன்.
சில மாதங்களாக எனக்கும், குடும்பத்துக்கும் மாதம்தோறும் ரூ.20,000 உதவித்தொகை தந்துவிட்டு, நிறுத்திவிட்டார். தற்போது முழுவதுமாக என்னுடைய குழந்தைகளுடன் பேசுவதையும் நிறுத்திவிட்டார். எங்களுக்குக் கொலை மிரட்டலும் விடுக்கிறார்.
அதனால் அவரைச் சந்தித்து முறையிடவே இங்கு வந்தேன். ஆனால் அவர் இங்கு இல்லை என்று தெரிவித்ததால் குழந்தைகளுடன் காத்திருக்கிறேன்” என்றவர், எம்.எல்.ஏ கல்யாணசுந்தரத்துக்கும் தனக்கும் திருமணமானபோது எடுத்த புகைப்படங்களை வெளியிட்டார். அத்துடன் தன்னுடைய இரண்டு குழந்தைகளின் பிறப்புச் சான்றிதழ்களையும் வெளியிட்டார். அதையடுத்து அவர்கள் லாஸ்பேட்டை போலீஸில் புகார் அளிக்கச் சென்றனர்.
ஆனால், அவர்கள் மகளிர் காவல் நிலையத்தில் புகாரளிக்கும்படி அனுப்பிவைத்தனர். அதையடுத்து எல்லம்மாள் மகளிர் காவல் நிலையத்துக்குச் சென்றபோது, தங்கள் காவல் நிலையப் பகுதி வில்லியனூரில் வரும் என்று கூறி, அங்கு அனுப்பிவிட்டனர். புகார் எம்.எல்.ஏ-வுக்கு எதிரானது என்பதால் போலீஸார் மனுவை வாங்காமல் அலைக்கழித்தனர் என்கிறார்கள்.
இது குறித்து விளக்கம் கேட்க எம்.எல்.ஏ கல்யாணசுந்தரத்தைத் தொடர்புகொண்டபோது, “அது பொய்ப் புகார். அது குறித்து, பிறகு பேசுகிறேன்” என்று சுருக்கமாக முடித்துக்கொண்டார்.