போதை விவகாரம் : மலையாள நடிகர்கள் ஷேன் நிகம், ஸ்ரீநாத் பாசிக்கு தடை
மலையா திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் மற்றும் நடிகர் சங்கம் ஆகியவற்றின் கூட்டு கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் மலையாள முன்னணி நடிகர்களான ஷேன் நிகம், ஸ்ரீநாத் பாசி ஆகியோருக்கு தடை விதிக்கப்பட்டது. இருவரும் படப்பிடிப்பு தளங்களில் போதை பொருள் பயன்படுத்துவதாலும், கால்ஷீட் விஷயத்தில் குழப்பம் ஏற்படுத்தி தயாரிப்பாளர்களுக்கு பெரும் நஷ்டத்தை உருவாக்குவதாலும் இந்த தடை விதிக்கப்படுவதாக அறிவித்துள்ளன. இந்த முடிவை மலையாள திரைப்பட தொழிலாளர் சங்கமும் அங்கீகரித்துள்ளது.
இது குறித்து தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ரஞ்சித் நிருபர்களிடம் கூறியதாவது: ஷேன் நிகம், ஸ்ரீநாத் பாசி இருவரும் தொடர்ந்து தயாரிப்பாளர்களுக்கும், தொழில்நுட் கலைஞர்களுக்கும் தொல்லை கொடுத்து வருகிறார்கள், போதை பழக்கத்திற்கு அடிமையான அவர்களால் தொடர்ந்து பிரச்சினை ஏற்படுகிறது. தடை செய்யப்பட்ட போதை பொருட்களை அவர்கள் படப்பிடிப்பு தளத்தில் பயன்படுத்துவதால் தயாரிப்பாளர்களுக்கு சிக்கல் உருவாகிறது. படப்பிடிப்புக்கு ஒழுங்காக வருவதில்லை. கால்ஷீட்டில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறார்கள். அதனால் அவர்களுக்கு தடை விதித்துள்ளோம். ஏராளமான மலையாள நடிகர்கள் போதை பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளனர். இது கவலை அளிப்பததாக உள்ளது. என்றார்.
தடை செய்யப்பட்ட ஷேன் நிகம், குழந்தை நட்சத்திரமாக இருந்து ஹீரோவானவர், கிஸ்மத், இஷ்க், ஈடா, பூதகாலம், வெயில், உல்லாசம், கொரோனா பேப்பர்ஸ் உள்பட பல படங்களில் நடித்துள்ளார். ஸ்ரீநாத் பாசி ஆரம்பத்தில் சின்ன சின்ன கேரக்டர்களில் நடித்து வந்தார். கும்பளாங்கி நைட்ஸ், ஹனிபீ, இப்லீஸ், அஞ்ஞாம் பாதிரா, ஹோம், படங்களின் மூலம் கவனிக்க வைத்தார். சமீபத்தில் வெளியான 'சட்டம்பி' படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார்.