நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தன் மீதான குற்றச்சாட்டை முற்றிலும் மறுத்துள்ளார்.
பேருந்தில் தொண்டர்களுக்கு டிக்கெட் எடுத்த அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்!
நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக ஒரு ஆடியோவை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட அரசியல் களத்தில் பரபரப்பு பற்றிக் கொண்டது.
தற்போது இந்த ஆடியோ குறித்து அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மறுத்து வீடியோ மூலம் பேசியுள்ளார்.
அதில், “எனது இந்த அறிக்கை 22 ஏப்ரல் 2023 அன்று நான் வெளியிட்ட எழுத்துப்பூர்வமான அறிக்கையின் தொடர்ச்சியாகும். இதனை தொடர்வதற்கு முன்னர் நவீன செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் (AI) எப்படி Deep fake போலி காணொளிகளை உருவாக்கும் என்பதற்கான சில உதாரணங்களை நான் காண்பிக்க விரும்புகிறேன்” என்று கூறி போலி வீடியோக்களின் காட்சிகளை காட்டினார்.
தொடர்ந்து பேசிய அவர், “இத்தகைய உண்மை போன்று தோற்றமளிக்கும் வீடியோக்களை கணினி மூலம் உருவாக்க முடியும் என்றால், ஆடியோ கோப்புகளை என்னவெல்லாம் செய்ய முடியும் என்று கற்பனை செய்து பாருங்கள்.
நேற்று முதல் சமூக வலைதளங்களில் பரவி வரும் ஆடியோ கிளிப்பில் உள்ள எந்த செய்தியையும், எந்த ஒரு தனி நபரிடமோ, தொலைபேசி உரையாடலிலோ அல்லது தனிப்பட்ட உரையாடலிலோ நான் கூறவில்லை என்று உறுதியாக கூற விரும்புகிறேன். இந்த உரையாடல் தங்களுடன் நடந்தது என்று சொல்ல இதுவரை யாரும் முன்வராதது குறிப்பிடத்தக்கது.
பாஜக மாநில தலைவர் யாரோ ஒருவர் குறிப்பிட்ட எந்த நபருடனும் சொல்லாத ஒன்றை, ஆடியோவாக வெளியிடும் அளவிற்கு கீழ்த்தரமாக இறங்கியுள்ளார். அவரது அரசியலின் தரம் இவ்வளவுதான்.
மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையில் நாங்கள் ஆட்சிக்கு வந்த இந்த இரண்டு ஆண்டுகளில் பல வரலாறு காணாத சாதனைகளையும், புதிய திட்டங்களையும் ஒரு மனிதாபிமான நிர்வாகத்தையும் அளித்துள்ளோம் இதையே நாங்கள் திராவிட மாடல் ஆட்சி முறை என்று அழைக்கிறோம். இத்தகைய உயரிய இலக்குகளை அடைய நாங்கள் மிகப்பெரிய நிதி
சீர்திருத்தங்களை மேற்கொண்டு கடந்த பத்தாண்டுகளில் செய்ய முடியாத சாதனைகளை இரண்டே ஆண்டுகளில் சாதித்துள்ளோம்.
இவை கடந்த பத்தாண்டுகளில் ஒன்றிய பா.ஜ.க அரசு செய்தவற்றை விட மகத்தான சாதனைகளாகும். இதனை நேரடியாக ஒப்புநோக்கி பார்த்தாலே திராவிட மாடல் ஆட்சியின் செயல் வேகம் தெரியும்.
இத்தகைய சாதனைகளை சில சக்திகளால் சகித்துக் கொள்ள முடியவில்லை. எனவே அவர்கள் எங்களது சிறப்பான பணிகளை சீர்குலைக்கும் நோக்கத்துடன் நவீன தொழில்நுட்பத்தை மலிவான யுத்திக்காக பயன்படுத்தி இத்தகைய ஜோடிக்கப்பட்ட ஆடியோவை வெளியிட்டுள்ளனர்.
முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாட்டின் ஒற்றை நம்பிக்கையாக மட்டுமல்ல, ஒட்டுமொத்த நாட்டிற்கே வழிகாட்டும் ஒளியாக இருக்கிறார்.
எங்களது நம்பிக்கை நட்சத்திரமான மாண்புமிகு விளையாட்டுத்துறை அமைச்சர்
அவர்கள் பொதுமக்கள் மத்தியில், குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் மகத்தான வரவேற்பை பெற்றுள்ளார். இதைப் பார்த்து அவரை அமைச்சராக்க வேண்டும் என்று தலைவரிடம் வலியுறுத்தியவர்களில் நானும் ஒருவன். அனைவரது எதிர்பார்ப்பையும் விஞ்சி அமைச்சர் உதயநிதி அவர்கள் செயல்பட்டு வருகிறார்கள். முதலமைச்சரைப் போலவே கள ஆய்வும் சிறப்பாக நடத்தி வருகிறார். தமிழக விளையாட்டு துறையை நோக்கி உலகின் கவனத்தை ஈர்த்து வருகிறார். இப்படிப்பட்ட ஆற்றல்மிகு செயல்வீரரைக் குறித்து நான் எப்படி தவறாகப் பேசுவேன்?
அதேபோன்று, நமது திராவிட மாடல் ஆட்சியில் அனைத்து அமைச்சர்களும் ஓரணியாக ஒன்றுபட்டு மகத்தான சாதனைகளை எய்தும் வண்ணம் செயல்பட்டு வருகின்றனர். அவ்வாறு இருக்கையில் நான் ஏன் அவர்களைப் பற்றி தவறாக பேசவேண்டும்?
நான் அரசியலுக்கு வந்தது முதல் எனக்கு நல்ல வழிகாட்டியாகவும், ஆலோசகராகவும், உறுதுணையாகவும் இருப்பவர் திரு. சபரீசன் அவர்கள். எதிர்க்கட்சிகள் கூட திரு உதயநிதி மற்றும் திரு சபரீசன் மீது எந்த குற்றச்சாட்டும் வைக்கவில்லை. எனவே, அவர்கள் மீது களங்கம் சுமத்தும் வீண் முயற்சியில் இதுபோன்ற ஜோடிக்கப்பட்ட ஆடியோக்கள் உருவாக்கப்படுகின்றன.
இவர்களிடம் இருந்து என்னைப் பிரிப்பதன் மூலமாக தங்களது அரசியல் எண்ணங்களை நிறைவேற்றத் துடிக்கிறது ஒரு பிளாக் மெயில் கும்பல். ஆனால் இது போன்ற கோழைத்தனமான முயற்சிகள் ஒருபோதும் வெற்றி பெறாது.
தி.மு.கழகம் தொடங்கிய காலத்திலிருந்தே, ஒரே இயக்கம், ஒரே கட்சி, ஒரே குடும்பம் என அனைவரும் ஒற்றுமையுடன் இயங்கி வருகிறோம். இனி வரும் காலங்களிலும் அவ்வாறே தொடர்வோம். அறம் வெல்லும்! நன்றி” என்று தெரிவித்துள்ளார்.