ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் இன்று மாவோயிஸ்ட் நடத்திய குண்டுவெடிப்பு தாக்குதலில் நக்சல் தடுப்பு படையை சேர்ந்த 11 போலீசார் உடல் சிதறி பலியாகினர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில் இந்தியாவில் கடந்த 5 ஆண்டுகளில் நக்சலைட்டுகள் மற்றும் மாவோயிஸ்ட் நடத்திய தாக்குதல்கள் மற்றும் அவர்களுக்கு எதிராக போலீசார், பாதுகாப்பு படையினர் எடுத்த அதிரடி நடவடிக்கைகளின் விபரம் வருமாறு:
இந்தியாவில் சில மாநிலங்களில் இன்னும் நக்சலைட்டுகள் மற்றும் மாவோயிஸ்ட்டுகளின் நடமாட்டம் உள்ளது. இவர்களுக்கு எதிராக மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். அவர்களின் மறுவாழ்வுக்கும் உதவி செய்து வருகின்றனர்.
இருப்பினும் கூட பலரும் நக்சலைட்டுகளாகவும், மாவோயிஸ்ட்டுகளால் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தான் சத்தீஸ்கர் மாநிலத்தில் இன்று மாவோயிஸ்ட்டுகள் நடத்திய குண்டுவெடிப்பு இந்தியாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
11 பேர் உடல் சிதறி பலி: அதாவது சத்தீஸ்கர் மாநிலம் தன்டேவாடா மாவட்டத்தில் அரன்பூர் அருகே நக்சல் தடுப்பு படையை சேர்ந்த போலீசார் இன்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது திடீரென்று நக்சலைட்டுகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 10 வீரர்கள் மற்றும் வாகன டிரைவர் என 11 பேர் உடல் சிதறி பலியாகினர். இந்த சம்பவம் தான் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய உள்ளது. இதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.

5 ஆண்டு தாக்குதல்: இதற்கிடையே தான் இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு தாக்குதல்கள் நடந்துள்ளன. அதில் கடந்த 5 ஆண்டுகளில் நக்சலைட்டுகள் மற்றும் மாவோயிஸ்ட்டுகள் நடத்திய முக்கிய தாக்குதல் மற்றும் அவர்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றிய முழுவிபரம் வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:
2023ல் நடந்த தாக்குதல்கள்: * பிப்ரவரி 5: மூன்று மாவோயிஸ்டுகள் சத்தீஸ்கர் பாஜக தலைவர் நீலகண்ட கக்கேமை வெட்டிக் கொன்றனர்.
* பிப்ரவரி 11: சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்புரா மாவட்ட பாஜக துணை தலைவர் சுட்டு கொல்லப்பட்டார். இவர்களை நக்சலைட்டுகள் தான் சுட்டு கொன்றதாக சந்தேகம் உள்ளது.
* ஏப்ரல் 3: ஜார்கண்ட் மாநிலம் சத்ராவில் சிபிஐ(மாவோயிஸ்ட்) அமைப்பை சேர்ந்த 5 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த அமைப்பின் பீகார்-ஜார்கண்ட் பிராந்திய குழு ஏப்ரல் 14, 15 தேதிகளில் பந்த் நடத்த கோரி போஸ்டர்கள் ஒட்டியது.

2022ல் நடந்த தாக்குதல்கள்: * ஜனவரி 4: ஜார்கண்ட் மாநிலம் மேற்கு சிங்பூம் மாவட்டத்தில் மனோகர்பூர் முன்னாள் பாஜக எம்எல்ஏ குருசரண் நாயக் என்பவரை சிபிஐ (மாவோயிஸ்ட்) கும்பல் தாக்கியது. இதில் அவர் தப்பினார். இருப்பினும் அவரது 2 பாதுகாவலர்கள் கழுத்தை அறுத்து கொன்றுவிட்டு துப்பாக்கிகளை பறித்து சென்றனர்.
* செப்டம்பர் 2: ஜார்கண்ட் மாநிலம் சரைகேலா கர்சவான் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில் சிபிஐ (மாவோயிஸ்ட்) கும்பலை சேர்ந்த 2 பேர் கொல்லப்பட்டனர்.
* நவம்பர் 26: சத்தீஸ்கர் மாநிலம் பிஜப்பூர் மாவட்டம் பஸ்தார் பிரிவில் பாதுகாப்புப் படையினரால் 2 பெண்கள் உட்பட 4 நக்சல்கள் கொல்லப்பட்டனர். மேலும் துப்பாக்கிகள், ஆயுதங்கள் வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
2021ல் நடந்த தாக்குதல்: * ஏப்ரல் 3: தெற்கு சத்தீஸ்கரின் பிஜப்பூர் மற்றும் சுக்மா மாவட்ட எல்லையில் மாவோயிஸ்ட்கள் நடத்திய தாக்குதலில் 14 சத்தீஸ்கர் போலீசார் மற்றும் 7 சிஆர்பிஎப் வீரர்கள் உட்பட 22 பேர் கொல்லப்பட்டனர். ஒரு சிஆர்பிஎப் வீரர் மாவோயிஸ்டுகளால் சிறை பிடிக்கப்பட்டார்.
* மார்ச் 23: சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூர் மாவட்டத்தில் 20க்கும் மேற்பட்ட பாதுகாப்புப் படையினருடன் சென்ற பஸ் மீது நக்சலைட்டுகள் தாக்குதல் நடத்தினர். இதில் 5 பேர் இறந்த நிலையில் 13 பேர் காயமடைந்தனர்.
* ஏப்ரல் 3: சத்தீஸ்கர் மாநிலம் பிஜப்பூர் மாவட்டத்தில் உள்ள காடுகளில் மாவோயிஸ்டுகளை தேடும் பணி நடந்தது. அப்போது பாதுகாப்பு படையினர் மற்றும் நக்சலைட்டுகள் இடையே ஒருமணிநேரம் கடும் துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் பாதுகாப்பு படையை சேர்ந்த 30 பேர் கொல்லப்பட்டனர். 31 பேர் வரை காயமடைந்தனர். 20 பேர் மாயமானதாக அறிவிக்கப்ட்டது.
* நவம்பர் 13: சத்தீஸ்கர் எல்லையில் உள்ள கட்சிரோலி மாவட்டத்தில் கோர்ச்சி அருகே மார்டிண்டோலா வனப்பகுதியில் மகாராஷ்டிரா போலீசார் நடத்திய என்கவுண்ட்டரில் 26 நக்சலைட்டுகள் கொல்லப்டட்டனர். இதில் சிபிஐ (மாவோயிஸ்ட்) மத்திய குழு உறுப்பினர் மிலிந்த் டெல்டும்டேவும் ஒருவராவார்.

2020ல் நடந்த தாக்குதல்கள்: * பிப்ரவரி 8: சத்தீஸ்கர் மாநிலம் பிஜப்பூர் மாவட்டத்தில் நக்சல்கள் நடத்திய தாக்குதலில் 2 கோப்ரா கமாண்டோக்கள் கொல்லப்பட்டனர்.
* மார்ச் 21: சுக்மா மாவட்டத்தின் எல்மகுடா வனப்பகுதியில் மாவோயிஸ்ட்கள் நடத்திய தாக்குதலில் சத்தீஸ்கர் காவல்துறையின் 17 பேர் கொலை செய்யப்பட்டனர். இதில் 12 மாவட்ட ரிசர்வ்படை போலீசார், 5 சிறப்பு அதிரடி படையை சேர்ந்தவர்கள் அடங்குவார். மேலும் 15 பணியாளர்கள் காயமடைந்தனர்.
* ஆகஸ்ட் 20: சிக்பாலில் 12 வயது சிறுமி உட்பட 10 கிராம மக்கள் மீது மாவோயிஸ்டுகள் தாக்கதல் நடத்தினர். இதில் அவர்கள் படுகாயமடைந்தனர்.
* நவம்பர் 28: சுக்மாவில் நக்சல்கள் நடத்திய ஐடிஇ ரக தாக்குதலில் 1 கோப்ரா கமாண்டோ பலியானார். 9 பேர் காயமடைந்தனர்.
2019ல் நடந்த தாக்குதல்: * மார்ச் 8: கேரளா மாநிலம் வயநாடு ரிசார்ட்டில் போலீசாருடன் நடந்த என்கவுன்டரில் ஒரு நக்சலைட் தலைவர்கள் கொல்லப்பட்டார்.
* மே 1: மகாராஷ்டிர மாநிலம் கட்சிரோலியில் நக்சலைட்டுகள் நடத்திய ஐஇடி குண்டுவெடிப்பில் நக்சல் எதிர்ப்புக்கான குழுவில் பணியாற்றி வந்த ஓட்டுநர் உட்பட 16 போலீஸார் கொல்லப்பட்டனர்.
* ஜூன் 14: ஜார்கண்ட் மாநிலம் சரைகேலா கர்சவான் மாவட்டத்தில் உள்ள வாரச்சந்தையில் மாவோயிஸ்ட்கள் 5 காவலர்களைக் கொன்றனர்.
* அக்டோபர் 28: பாலக்காட்டின் அட்டப்பாடி மலைப் பகுதியில் கேரள காவல்துறையின் உயரடுக்கு கமாண்டோ குழுவான “தண்டர்போல்ட்” என்கவுண்டரில் 3 மாவோயிஸ்டுகள் சுட்டு கொல்லப்பட்டனர். அதைத்தொடர்ந்து மறுநாளும் கேரளா போலீசார் மூலம் மாவோயிஸ்ட் குழுவை சேர்ந்த ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.
* நவம்பர் 23: ஜார்கண்ட் மாநிலம் லதேஹரில் ரோந்து வேன் மீது நக்சல்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஒரு ஏஎஸ்ஐ மற்றும் மூன்று ஊர்க்காவல் படையினர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.