சென்னை: சிவகார்த்திகேயன் தற்போது மாவீரன் படத்தில் பிஸியாக நடித்து வருகிறார்.
மடோன் செபாஸ்டின் இயக்கத்தில் உருவாகும் இந்தப் படம் ஆகஸ்ட் 11ம் தேதி வெளியாகிறது.
இதனைத் தொடர்ந்து தீபாவளி ஸ்பெஷலாக ரவிக்குமார் இயக்கியுள்ள அயலான் திரைப்படமும் வெளியாகிறது.
இந்நிலையில், சிவகார்த்திகேயனின் அடுத்த திரைப்படம் குறித்த தரமான அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.
மீண்டும் இணையும் அயலான் கூட்டணி
2017ம் ஆண்டு தொடங்கப்பட்ட அயலான் படத்துக்கு தற்போது நல்ல காலம் பிறந்துள்ளது. ரவிகுமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்த இந்தப் படம், சயின்ஸ் பிக்சன் ஜானரில் உருவாகியுள்ளது. முன்னதாக பட்ஜெட் பிரச்சினையால் கிடப்பில் போடப்பட்டிருந்த அயலான், KJR ஸ்டூடியோஸ் தயாரிப்பில் முடிவுக்கு வந்துள்ளது.
இன்று நேற்று நாளை திரைப்படம் மூலம் இயக்குநரான ரவிக்குமார், அயலான் படத்தை இயக்கியுள்ளார். லோ பட்ஜெட்டில் உருவான இன்று நேற்று நாளை டைம் ட்ராவல் பின்னணியில் மிரட்டலாக உருவாகியிருந்தது. லோ பட்ஜெட்டில் அட்டகாசமான திரைக்கதையுடன் சயின்ஸ் பிக்ஷன் படத்தை இயக்கி ஆச்சரியப்படுத்தியிருந்தார். அதன் காரணமாகவே அயலான் படம் மீதும் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

இந்நிலையில், இருதினங்களுக்கு முன்னர் அயலான் ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு, மினி டீசரையும் வெளியிட்டது. 28 நொடிகள் மட்டுமே ஓடும் இந்த டீசர் மேக்கிங்கில் சிலிர்க்க வைத்துள்ளது. டீசரே இப்படியென்றால் முழு திரைப்படமும் எப்படி இருக்கும் என சினிமா ரசிகர்களுக்கு ஆர்வம் ஏற்பட்டுள்ளது. பொதுவாகவே கிடப்பில் போடப்பட்டு நீண்ட இடைவேளைக்குப் பிறகு ரிலீஸாகும் படங்களுக்கு எதிர்பார்ப்பு இருக்காது.
ஆனால், சிவகார்த்திகேயனின் அயலான் இந்த விசயத்தில் பெரிய மாற்றத்தை நிகழ்த்தும் என எதிர்பார்க்கலாம். அதேபோல், தனது இரண்டாவது படத்திற்காக 5 ஆண்டுகள் உழைத்துள்ளார் இயக்குநர் ரவிக்குமார். பட்ஜெட் பிரச்சினை தான் இதற்கு காரணம் என்றாலும், சிவகார்த்திகேயனுக்காகவே இயக்குநர் ரவிக்குமார் அயலான் ப்ராஜக்ட்டில் அதிக கவனம் செலுத்தினார்.
இதற்கு நன்றி செலுத்தும்விதமாக மீண்டும் ரவிக்குமாருக்கு கால்ஷீட் கொடுத்துள்ளாராம் சிவகார்த்திகேயன். இன்னொரு பக்கம் அயலான் படத்தின் மேக்கிங்கும் காரணம் என சொல்லப்படுகிறது. அதன்படி சிவகார்த்திகேயன் – ரவிக்குமார் இணையும் இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளதாம். இந்தப் படமும் அயலான் போல மிகப் பெரிய பட்ஜெட்டில் உருவாகவுள்ளதாக சொல்லப்படுகிறது.

அயலான் திரைப்படம் வெளியான பின்னர் இந்தக் கூட்டணி குறித்து அபிஸியலாக அறிவிக்க திட்டமிட்டுள்ளார்களாம். மேலும், இதுவும் சயின்ஸ்பிக்ஷன் படமாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், சிவகார்த்திகேயன், ரவிக்குமார், சன் பிக்சர்ஸ் உடன் ஏஆர் ரஹ்மானும் இணைவாரா என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். இந்நிலையில், அயலான் உடன் கேப்டன் மில்லர், ஜப்பான் படங்களும் தீபாவளி ரேஸில் களமிறங்குவது குறிப்பிடத்தக்கது.