தலைநகர் டில்லியில், வடக்கு டில்லி – 104, தெற்கு டில்லி – 104 மற்றும் கிழக்கு டில்லி 64 வார்டுகள் கொண்ட மூன்று மாநகராட்சிகள் செயல்பட்டு வந்தன. கடந்த 2022ல் மூன்று மாநகராட்சிகளும் ஒருங்கிணைக்கப்பட்டும் 250 வார்டுகள் டில்லி மாநகராட்சி உருவாக்கப்பட்டது. இதற்கான அறிவிப்பு 2022ம் ஆண்டு மே மாதம் வெளியிடப்பட்டது.இதைத் தொடர்ந்து, டில்லி மாநகராட்சி தேர்தல் டிசம்பர் 4ல் நடந்தது. இதில், ஆம் ஆத்மி கட்சி 134, பா.ஜ., 104, காங்கிரஸ் 9 மற்றும் சுயேச்சை மூன்று இடங்களைக் கைப்பற்றின.
இதையடுத்து, பிப். 22ல் நடந்த மேயர் மற்றும் துணை மேயர் பதவிகளுக்கான தேர்தலில், ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த ஷெல்லி ஓபராய் மேயராகவும் ஆலே முகமது இக்பால் துணை மேயராகவும் வெற்றி பெற்றனர்.
தற்போதைய மேயர் மற்றும் துணை மேயர் கடந்த பிப்ரவரி மாதம்தான் பொறுப்பேற்றனர். இருப்பினும் இந்தப் பதவிகள் நிதியாண்டு முறையிலேயே கணக்கிடப்படுகிறது.இதையடுத்து, இந்த நிதியாண்டுக்கான மேயர் மற்றும் துணை மேயர் பதவிகளுக்கான தேர்தல் இன்று நடைபெற்றது.
இதில், ஆம் ஆத்மி கட்சி சார்பில் தற்போதைய மேயர் ஷெல்லி ஓபராய், துணை மேயர் ஆலே முகமது இக்பால் ஆகியோரே மீண்டும் போட்டியிடுகின்றனர்.பா.ஜ., சார்பில், கிரேட்டர் கைலாஸ் வார்டு கவுன்சிலர் ஷிகா ராய் மேயர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். துணை மேயருக்கு 249வது வார்டு கவுன்சிலர் சோனி பாண்டே போட்டியிடுகிறார்.
இந்நிலையில்,டெல்லி மாநகராட்சி மேயராக ஆம் ஆத்மி கட்சியின் ஷெல்லி ஓபராய் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். டெல்லி மேயர் தேர்தலில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் ஷிகா ராய் விலகியதால் ஷெல்லி ஓபராய் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மேலும், டெல்லி மாநகராட்சி துணை மேயர் பதவிக்கான போட்டியில் இருந்தும் பாஜக வேட்பாளர் சோனி பாண்டேவும் வாபஸ் பெற்றுள்ளார்.