விதவிதமான ஆடைகளில் அசத்தும் 'சோழப் பெண்கள்'

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள 'பொன்னியின் செல்வன் 2' நாளை மறுதினம் ஏப்ரல் 28ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. எம்ஜிஆர், கமல்ஹாசன் உள்ளிட்ட சிலர் கல்கியின் நாவலை படமாக்க முடியாமல் கைவிட்டுவிட மணிரத்னம் அதை இரண்டு பாகப் படமாக்கி சாதனை புரிந்தார்.

படத்தில் உள்ள பெண் கதாபாத்திரங்களில் நந்தினி மற்றும் மந்தாகினி கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராய், குந்தவை கதாபாத்திரத்தில் த்ரிஷா, வானதி கதாபாத்திரத்தில் ஷோபிதா துலிபலா, பூங்குழலி கதாபாத்திரத்தில் ஐஸ்வர்ய லட்சுமி ஆகியோர் நடித்துள்ளனர்.

கடந்த பத்து நாட்களுக்கும் மேலாக 'சோழர்களின் பயணம்' என படத்தின் புரமோஷன் பயணத்தை படக்குழுவினர் மேற்கொண்டனர். விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி ஆகியோருடன் த்ரிஷா, ஷோபிதா, ஐஸ்வர்ய லட்சுமி ஆகியோர் அனைத்து இடங்களிலும் கலந்து கொண்டனர். ஐஸ்வர்யா ராய் ஐதராபாத், மும்பை ஆகிய இடங்களில் நடைபெற்ற நிகழ்வுகளில் மட்டும் கலந்து கொண்டார்.

கடந்த பத்து நாட்களாக த்ரிஷா, ஐஸ்வர்ய லட்சுமி, ஷோபிதா ஆகியோர் விதவிதமான டிசைன்கள், வண்ணங்களில் அணிந்த ஆடைகளுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களை ஆக்கிரமித்திருந்தன. குறிப்பாக இத்தனை வயதிலும் த்ரிஷா இவ்வளவு அழகாக இருக்கிறாரே என ரசித்து கமெண்ட்டுகளைப் பதிவிட்டவர்கள் நிறைய பேர். அவருக்கு இணையாக ஷோபிதா, ஐஸ்வர்ய லட்சுமி ஆகியோரும் ரசிகர்களைக் கவர்ந்தனர்.

பத்திரிகையாளர் சந்திப்புகள், டிவி, யு டியூப் சேனல் பேட்டிகள் என தருவதற்காக இந்த நடிகைகளுடன் அவர்களது ஆடை, அலங்கார, ஒப்பனைக் குழுவினரும் தனி விமானத்தில் பயணம் செய்து நடிகையர்களை அழகாகக் காட்ட ஒத்துழைத்துள்ளார்கள்.

இன்றுடன் இந்த சோழர்களின் பயணம் நிறைவுக்கு வருகிறது. நாளை சென்னையில் பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றும் நடக்க இருக்கிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.