வெளிநாட்டு வேலைக்கு செல்வதற்கு தொழிற்பயிற்சி பெற்றிருப்பது கட்டாயம் – வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார

வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக வெளிநாடு செல்ல இருப்பவர்கள் தொழிற்பயிற்சியைப் பெற்றிருப்பது கட்டாயம் என்பதுடன், அனைத்து வெளிநாட்டு வேலைவாய்ப்புக்களுக்கும் பயிற்சி பெற்ற தொழிலாளர்கள் மாத்திரமே அனுப்பப்படுவார்கள் என்று தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று (26) அமைச்சர், ஊடகங்களுக்கு விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையிலேயே அவர் இந்த விடயங்களைக் குறிப்பிட்டுள்ளார்.

அவ் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது…

வெளிநாட்டு வேலைவாய்ப்புக்களுக்கு தொழிற்பயிற்சி கட்டாயமானது. கடவுச் சீட்டுக்களை பெற்றால் மாத்திரம் வெளிநாடு செல்ல முடியாது. ஓவ்வொரு நாட்டிற்கும், தொழிலுக்கும் ஏற்ற தகுதிகள் உள்ளன.

தற்போது, வீட்டு வேலைக்காக NVQ 03 சான்றிதழ் இல்லாமல் தொழிலாளர்கள் வெளிநாட்டு வேலைக்கு அனுப்பப்படுவதில்லை. தொழிலாளர்களை வெளிநாட்டு வேலைக்கு அனுப்புவதில் நமது நிலைமையை மேம்படுத்த வேண்டும்.

நாட்டில் பலர் தொழிற்பயிற்சியின்றி வெளிநாட்டு வேலைக்குச் செல்வதால், அநாதரவாகி, அசௌகரியங்களுக்கு உள்ளாகி பல்வேறு பிரச்னைகளை எதிர்நோக்குகின்றனர். இவை அனைத்தும் தொழிற்பயிற்சியின்மையால் எழுகின்றன, அதனால்தான் வெளிநாடு செல்கின்றவர்களுக்கு தொழிற்பயிற்சி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இதன்படி, நீங்கள் எந்த வெளிநாட்டு வேலைக்குச் சென்றாலும், அந்த வேலை தொடர்பான தொழில்சார் பயிற்சிகளைப் பெற வேண்டும் என்றும் அமைச்சர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.