ஆம் ஆத்மி தலைமையிலான ஆட்சி நடைபெற்றுவரும் டெல்லியில் கடந்த டிசம்பரில் நடைபெற்ற மாநகராட்சித் தேர்தலில் ஆம் ஆத்மி 250 இடங்களுக்கு 134 இடங்கள் பெற்று 15 ஆண்டுகளாக பெரும்பான்மையாக இருந்த பா.ஜ.க-வை வீழ்த்தியது. டெல்லி மாநகராட்சி சட்டத்தின்படி, மாநகராட்சித் தேர்தல் நடந்துமுடிந்த பிறகு கூடும் முதல் கூட்டத்திலேயே மேயர், துணை மேயர் ஆகியோரைத்த தேர்ந்தெடுக்கவேண்டும். அதன்படி, மேயர், துணை மேயர் தேர்வுக்கு ஆம் ஆத்மி தரப்பிலிருந்து ஷெல்லி ஓபராய் (Shelly Oberoi) , ஆலே முகமது இக்பால் ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர். பா.ஜ.க தரப்பிலிருந்து ஷிகா ராய், சோனி பாண்டே ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
ஆனால், தேர்தலுக்குப் பிறகு நடந்த ஒவ்வொரு கூட்டத்திலும் ஆம் ஆத்மி, பா.ஜ.க-வினர் அமளியால் யாரும் தேர்ந்தெடுக்கப்படவில்லை. இப்படியே மூன்று மாதங்கள் கடந்துவிட்டன. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையும் நடைபெற்றது. பின்னர் ஒருவழியாக ஏப்ரல் 26-ம் தேதியன்று மேயர், துணை மேயர் தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இப்படியான சூழலில், இன்று மேயர், துணை மேயர் தேர்வு நடைபெறுவதற்குச் சற்று நேரத்துக்கு முன்பாக பா.ஜ.க தரப்பிலிருந்து மேயர், துணை மேயர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்திருந்த ஷிகா ராய், சோனி பாண்டே ஆகிய இருவரும் தங்களின் வேட்புமனுவைத் திரும்பப் பெற்றுக்கொண்டனர்.
இதற்கு ஷிகா ராய் தரப்பிலிருந்து, மேயர், துணை மேயர் தேர்வு தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையிலிருப்பதால் வேட்புமனுவைத் திரும்பப்பெற்றதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதன் காரணமாகப் போட்டியின்றி மேயராக தேர்வான ஆம் ஆத்மி மேயர் வேட்பாளர் ஷெல்லி ஓபராய் போட்டியின்றி வெற்றிபெற்று, இரண்டாவது முறையாக மீண்டும் மேயரானார். அதேபோல், ஆம் ஆத்மி துணை மேயர் வேட்பாளர் ஆலே முகமது இக்பாலும் வெற்றிபெற்றார்.
அதைத் தொடர்ந்து முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், போட்டியின்றி வெற்றிபெற்ற ஷெல்லி ஓபராய், ஆலே முகமது இக்பாலுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
டெல்லி மாநகராட்சி மேயர் பதவி தேர்தலைப் பொறுத்தவரையில், ஐந்து நிதியாண்டுகளிலும் ஆண்டுக்கு ஒருமுறை மேயர் தேர்ந்தெடுக்கப்படுவர். அதில் முதலாம் ஆண்டு பெண்களுக்கும், இரண்டாம் ஆண்டு பொதுப்பிரிவினருக்கும், மூன்றாம் ஆண்டு இடஒதுக்கீடு பிரிவினருக்கும், அடுத்த இரண்டு ஆண்டுகள் பொதுப்பிரிவினருக்கும் ஒதுக்கப்படும்.