சென்னை : வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடித்த விடுதலை திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
இப்படத்தில் சூரி கதாநாயகனாக குமரேசன் என்ற கேரக்டரிலும், விஜய் சேதுபதி பெருமாள் வாத்தியார் என்ற கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர்.
மேலும் பவானி ஸ்ரீ, பிரகாஷ் ராஜ், கெளதம் வாசுதேவ் மேனன், ராஜீவ் மேனன், சேத்தன் மற்றும் பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
விடுதலை
மார்ச் மாதம் 31ந் தேதி தியேட்டரில் வெளியான இந்த படதை ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக திரையரங்குக்கு சென்று பார்த்தனர். இப்படத்தில் வன்முறை மற்றும் நிர்வாண காட்சிகள் இருந்ததால், தணிக்கைக்குழு இப்படத்திற்கு ஏ சான்றிதழ் கொடுத்து இருந்தது. இருப்பினும் வெற்றிமாறனின் ரசிகர்கள் இப்படத்தை குடும்பத்தோடு பார்த்தனர்.
நேர்த்தியான திரைக்கதை
வெற்றிமாறன் இந்தப் படத்தின் மூலம் முக்கியமான அரசியலை கையில் எடுத்திருக்கிறார் அதை நேர்த்தியாகவும், நேர்மையாகவும் கதையின் ஓட்டத்தில் அழகாக வெளிப்படுத்தி இருந்ததால், படத்தை ரசிகர்கள் கொண்டாடினர். குறிப்பாக சூரியின் நடிப்பை ரசிகர்கள் புகழ்ந்து வருகின்றனர். இளையராஜா இசையமைத்த இப்படத்திற்கு வேல்ராஜ்ஜின் ஒளிப்பதிவு படத்திற்கு மேலும் மெருகூட்டி உள்ளது.
உலகப்படங்களை மிஞ்சும் வகையில்
விடுதலை படம் பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், வெற்றிமாறன், சூரி உள்ளிட்ட படக்குழுவினரை நேரில் அழைத்து படம் மிகவும் அருமையாக இருப்பதாக பாராட்டினார். இது தொடர்பான புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் டிராண்டாகின. அதேபோல, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், இயக்குநருமான சீமான், உலகப்படம், ஆங்கிலப்படம் என்று சொல்லுவோம் அதை மிஞ்சும் வகையில் படம் எடுக்க நம்மிடத்திலும் ஆள் இருக்கிறது என்று வெற்றி மாறனை புகழ்ந்தார்.
விடுதலை 2
முதல் 4 கோடி ரூபாயில் சிறிய பட்ஜெட் படமாக தொடங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு நீண்டு கொண்டே சென்று 40 கோடி ஆகிவிட்டதால், தயாரிப்பாளருக்கு இழப்பு ஏற்படக்கூடாது என்பதற்காக இப்படத்தை இரண்டு பாகமாக வெளியிட படக்குழு முடிவு செய்தது. விடுதலை இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு மே மாதம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஓடிடி
இந்நிலையில் விடுதலை திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. இத்திரைப்படம் ஜீ5 ஓடிடி தளத்தில் ஏப்ரல் 28ந் தேதி வெளியாக உள்ளது. விடுதலை முதல் பாகத்தில் படத்தின் நீளம் கருதி நீக்கப்பட்ட 20 நிமிட காட்சி ஓடிடியில் இடம் பெறும் என்று தகவல் பரவிய நிலையில் , வெள்ளிக்கிழமை படம் வெளியாக உள்ளதால், கூடுதல் காட்சியை பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.
திரையில் வராத அந்த காட்சி
ஏனென்றால் அந்தப் காட்சிகள் ரசிகர்கள் மனதில் அந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அத்துடன் விடுதலை படத்தின் இரண்டாம் பாகம் எப்படி இருக்கும் எப்பொழுது வரும் என்று ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ரசிகர்களுக்கு இந்த ஏற்பாடு மகிழ்ச்சியை நிச்சயம் கொடுக்கும்.