டெல்லி:
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையுடன் எங்களுக்கு எந்த தகராறும் இல்லை என்று அதிமுக பொதுச்செயலாளர்
தெரிவித்தது நிருபர்களையே அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. சில நாட்களுக்கு முன்புதான் அண்ணாமலை ஒரு முதிர்ச்சியற்ற தலைவர்.. அவரை பற்றி என்னிடம் கேள்வி கேட்காதீர்கள் என எடப்பாடி பழனிசாமி கூறியிருந்த நிலையில், தற்போது இவ்வாறு தெரிவித்துள்ளார்.
திமுகவினரின் சொத்துப் பட்டியலை வெளியிடுவதாக கூறி கடந்த 14-ம் தேதி ஒரு எக்ஸல் ஷீட்டை வெளியிட்டார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை. இத்துடன் அவர் சென்றிருந்தால் எந்த பிரச்சினையும் ஏற்பட்டிருக்காது. ஆனால், போகிற போக்கில், திமுகவுடன் மட்டும் இந்த ஊழல் பட்டியல் நின்றுவிடாது.. தமிழகத்தில் ஆட்சியில் இருந்த அனைத்து கட்சிகளின் ஊழல் பட்டியலையும் வெளியிடுவோம் என அவர் கூறியது தான் புயலை கிளப்பியது.
தமிழகத்தில் ஆட்சியில் இருந்த கட்சிகள் என்றால் அவை திமுகவும், அதிமுகவும் தான். எனவே, அதிமுகவை மறைமுகமாக மிரட்டும் வகையிலேயே அண்ணாமலை இவ்வாறு பேசியதாக கருதப்பட்டது. அண்ணாமலையின் இந்த பேச்சால் கடுப்பான அதிமுகவினர் அவருக்கு கடுமையாக எதிர்வினை ஆற்றினர்.
சேலஞ்ச் செய்த ஜெயக்குமார்:
இதுகுறித்து பேசிய ஜெயக்குமார், “அண்ணாமலை அதிமுக என்று சொல்லட்டும். அவருக்கு சேலஞ்ச் செய்கிறேன். அவர் அதிமுகவின் ஊழல் பட்டியல் என்று சொல்லட்டும். பிறகு எங்களுடைய ரியாக்சனை பாருங்கள். இந்த மிரட்டல் உருட்டலுக்கு எல்லாம் நாங்கள் பயப்பட மாட்டோம்” என காட்டமாக பதிலளித்தார். அதேபோல, அண்ணாமலையின் இந்த பேச்சு குறித்து எடப்பாடி பழனிசாமியிடம் அடுத்த நாள் செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர்.
அவரை பற்றி பேசாதீங்க..
அப்போது எடப்பாடி பழனிசாமி, “அவரை பற்றி ஏன் பேசுறீங்க.. பேசி பேசியே பெரிய ஆள் ஆயிடலாம்னு அவர் நினைக்கிறார். அவரை பற்றி பேசாதீங்க.. முதிர்ச்சியான அரசியல் தலைவரை பற்றி கேளுங்க. நான் சொல்றேன். அவரை பற்றி எல்லாம் கேட்காதீங்க..” எனக் கூறினார். அண்ணாமலை பற்றி எடப்பாடி பழனிசாமி கோபமாக பதிலளித்தது இதுவே முதன்முறை ஆகும். எனவே, அதிமுக – பாஜக கூட்டணி பிரிந்துவிடும் என அரசியல் வட்டாரங்களில் பேச்சு எழுந்தது.
அமித் ஷாவுடன் சந்திப்பு:
இந்நிலையில், நேற்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி தலைமையிலான உயர்நிலைக் குழுவினர் டெல்லி சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேசினர். அப்போது அதிமுக – பாஜக கூட்டணி குறித்து பேசப்பட்டதாக தெரிகிறது. இதனைத் தொடர்ந்து, இன்று காலை எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், சம்பிரதாய வழக்கப்படி அமித் ஷாவை சந்தித்ததாக கூறினார்.
எந்த தகராறும் இல்லையே..
அப்போது அங்கிருந்த செய்தியாளர் ஒருவர், “அண்ணாமலைக்கும், உங்களுக்கும் இடையேயான தகராறு குறித்து நேற்றை சந்திப்பில் பஞ்சாயத்து எதுவும் நடைபெற்றதா?” என கேள்வியெழுப்பினார். அதற்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, “நீங்க தவறான கருத்தை கூறுகிறீர்கள்.. எங்களுக்கும், பாஜக தலைவர் அண்ணாமலைக்கும் எந்தவிதமான தகராறும் இல்லை. தகராறு இருந்தால் எப்படி ஈரோட்டில் வந்து அவர் பிரச்சாரம் செய்திருப்பார். இதுபோன்ற உள்நோக்கத்துடன் செய்தியாளர்கள் கேள்வியெழுப்பக் கூடாது. எங்கள் கூட்டணி தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. இனியும் தொடரும்” என அவர் பதிலளித்தார்.