போபால்:
எதிரி நாட்டு ஏவுகணைகள், வெடிகுண்டுகள் ஆகியவற்றுக்கே அசால்ட்டாக கல்தா கொடுத்த ராணுவ வீரர் ஒருவர், சாதாரண ராக்கெட் பட்டாசு தாக்கி உயிரிழந்த சோக சம்பவம் மத்திய பிரதேசத்தில் அரங்கேறியுள்ளது.
யானைக்கும் அடி சறுக்கும் என்ற பழமொழியை நாம் கேள்விப்பட்டிருப்போம். என்னதான் பெரிய திறமைசாலியாக இருந்தாலும், நேரம் சரியில்லை என்றால் சாதாரண விஷயத்தில் கூட கோட்டை விடுவதை பார்த்திருப்போம்.
அதுபோல், நாம் தான் பலவற்றை பார்த்திருக்கிறோமே.. இந்த சிறிய விஷயம் என்ன செய்துவிட போகிறது என்ற எண்ணத்தில் சிலர் ஆபத்தில் சிக்கிக் கொள்வார்கள். அப்படியொரு விஷயம்தான் மத்திய பிரதேசத்தில் நடந்திருக்கிறது.
மத்திய பிரதேச மாநிலம் தார் மாவட்டத்தில் உள்ள ஜலோக்கியா கிராமத்தைச் சேர்ந்தவர் நிர்பய் சிங் (35). 12 ஆண்டுகளுக்கு மேலாக நிர்பய் சிங், இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார். அருணாச்சலப் பிரதேசம், அசாம் போன்ற ஆபத்தான எல்லைப் பகுதிகளில் நிர்பய் சிங் பணிபுரிந்து வந்திருக்கிறார். தற்போது அவர் ஜம்மு – காஷ்மீர் எல்லையில் பணியாற்றி வந்தார். தனது பணிக்காலங்களில் பல வெடிகுண்டுகளில் இருந்தும், எதிரிகளின் தாக்குதலில் இருந்தும் அவர் தப்பி இருக்கிறார்.
இந்நிலையில், ஒரு மாத விடுமுறைக்கு நிர்பய் சிங் தனது சொந்த கிராமத்துக்கு வந்திருக்கிறார். இதனிடையே, அவரது அக்காள் மகளின் திருமணம் கடந்த செவ்வாய்க்கிழை நடைபெற்றது. இந்த திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நிர்பய் சிங், உற்சாக மிகுதியில் ஆட்டம் – பாட்டம் என கலக்கிக் கொண்டிருந்தார். அப்போது மணமகன் வருகைக்காக அங்கு பட்டாசுகள் வெடிக்கப்பட்டன.
இதை பார்த்த நிர்பய் சிங், தானும் அங்கிருந்த பட்டாசுகளை வெடித்தார். அப்போது அங்கிருப்பவர்களுக்கு வேடிக்கை காட்டுவதற்காக அணுகுண்டு போன்ற பெரிய வெடிகளை கைகளில் கொளுத்தி தூக்கிப் போட்டார். இதை அங்கிருந்தவர்கள் கைதட்டி ரசிக்கவே, இன்னும் உற்சாகமான நிர்பய் சிங்குக்கு ராக்கெட் வெடிகள் மீது கவனம் திரும்பியது.
இதையடுத்து, ராக்கெட் பட்டாசுகளை தனது வாயில் வைத்து பற்ற வைத்து, ஒவ்வொன்றாக ரிலீஸ் செய்தபடி நிர்பய் சிங் இருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக, ஒரு ராக்கெட் வெடி பற்ற வைத்த உடனேயே வெடித்து சிதறியது. இதில் நிர்பய் சிங்கின் வாய் கிழிந்து ரத்தம் கொட்டியது. கண்களும் பெயர்ந்தது. இதனால் வலியில் அலறி துடித்த நிர்பய் சிங்கை அங்கிருந்தவர்கள் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.
ஆனால், சிகிச்சை பலனில்லாமல் நிர்பய் சிங் நேற்று உயிரிழந்தார். எத்தனையோ நிஜ வெடிகுண்டு தாக்குதல்களில் இருந்து தப்பிய நிர்பய் சிங், ஆபத்து அறியாமல் செய்த காரியத்தால் ராக்கெட் பட்டாசு தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.