கர்நாடகாவில் தமிழ்தாய் வாழ்த்துக்கு நேர்ந்த அவமானம்.. அதுவும் அண்ணாமலை கண் முன்பே.. என்னாச்சு?

பெங்களூர்:
கர்நாடகாவில் பாஜகவின் பிரச்சார மேடையில் தமிழ்தாய் வாழ்த்து பாடல் பாதியிலேயே நிறுத்தப்பட்ட சம்பவம் தமிழுக்கு நேர்ந்த பெரும் அவமானமாக கருதப்படுகிறது. அதுவும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கண் முன்பே இந்த நிகழ்வு நடந்திருப்பது தான் பேசுபொருளாக மாறியுள்ளது.

கர்நாடகா சட்டமன்றத் தேர்தல் வரும் மே மாதம் 10-ம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி நெருங்கிவிட்டதால் அங்கு பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் சூறாவளி பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றன.

கர்நாடகாவில் தேர்தல் பொறுப்பாளராக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நியமிக்கப்பட்டுள்ளார். அதனால் கடந்த 3 மாதங்களாகவே வேட்பாளர் தேர்வு, பிரச்சாரம் உள்ளிட்ட பணிகளுக்காக கர்நாடகாவிலேயே தங்கியுள்ளார் அண்ணாமலை. கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியாக பல ஆண்டுகள் அண்ணாமலை இருந்ததால் அம்மாநிலத்தின் கள நிலவரத்தை அறிந்தவர் என்ற முறையில் அவருக்கு இந்த பொறுப்பை பாஜக மேலிடம் கொடுத்துள்ளது.

அந்த வகையில், கர்நாடகாவின் ஷிவமொக்கா நகரில் இன்று மாலை பாஜக பிரச்சாரப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் ஷிவமொக்கா பாஜக எம்எல்ஏ ஈஸ்வரப்பா, அண்ணாமலை உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர். நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பாக அங்கு தமிழ்தாய் வாழ்த்து ஒலிபரப்பட்டது. அங்கு தமிழர்கள் அதிக அளவில் வசிப்பதால் தமிழ்தாய் வாழ்த்து பாடல் ஒலிபரப்பப்படுவது வழக்கம்.

இந்நிலையில், தமிழ்தாய் வாழ்தது ஒலித்துக் கொண்டிருந்த போது, திடீரென பாஜக எம்எல்ஏ ஈஸ்வரப்பா கையை உயர்த்தி பயங்கரமாக சத்தம் போட்டார். பின்னர், மைக் அருகே சென்ற அவர், யார் தமிழ்தாய் வாழ்த்து பாடலை ஒலிபரப்பியது எனக் கூறி கடுமையாக திட்டினார். உடனடியாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் பாதியிலேயே தமிழ்தாய் வாழ்த்தை நிறுத்தி, கன்னட நாட்டு கீதத்தை ஒலிக்கச் செய்தனர்.

இந்த சம்பவம் நிகழ்ந்த போது, அண்ணாமலை மேடையில் நின்று கொண்டிருந்தார். எனினும், தமிழ்தாய் வாழ்த்து நிறுத்தப்பட்டதற்கு அவர் எதிர்வினை ஏதும் ஆற்றவில்லை. கர்நாடகாவில் தமிழக பாஜக தலைவர் முன்பே தமிழ்தாய் வாழ்த்து அவமதிக்கப்பட்டது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த வீடியோ சமூக வலைதளங்களிலும் வேகமாக பரவி பல்வேறு விமர்சனங்களை பெற்று வருகிறது.

ஏற்கனவே, ஐபிஎஸ் அதிகாரியாக இருந்த போது, நான் கன்னடன் என அண்ணாமலை பேசியதை வைத்து அவரை எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. இந்நிலையில், அவர் கண் முன்பே தமிழ்தாய் வாழ்த்து அவமதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.