காபூல்,
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் கடந்த 2021-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் வெளியேறியதும், அந்த நாடு தலீபான்கள் வசமானது. அதனை தொடர்ந்து, ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறுவதற்காக மக்கள் கூட்டம் கூட்டமாக காபூல் விமான நிலையத்தில் குவிந்தனர். காபூல் விமான நிலையத்தில் பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதால் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் எச்சரித்து வந்த நிலையில் ஆகஸ்டு மாதம் 26-ந் தேதி காபூல் விமான நிலையத்தில் அடுத்தடுத்து 4 குண்டுகள் வெடித்தன.
இதில் அப்பாவி பொதுமக்கள் 170 பேர் மற்றும் அமெரிக்க ராணுவ வீரர்கள் 13 பேர் கொல்லப்பட்டனர். உலக அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது.
இந்த நிலையில் காபூல் விமான நிலைய தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் தலைவரை தலீபான் படையினர் சுட்டுக்கொன்றதாக தகவல் வெளியாகி உள்ளது. அமெரிக்க உளவுத்துறையின் மூத்த அதிகாரிகள் இதனை தெரிவித்துள்ளனர்.
அதே சமயம் சுட்டுக்கொல்லப்பட்ட ஐ.எஸ். பயங்கரவாத தலைவரின் பெயர், அவர் எங்கு, எப்போது கொல்லப்பட்டார் என்பன போன்ற தகவல்கள் வெளியாகவில்லை.