‘கள ஆய்வில் முதலமைச்சர்’ திட்டத்தின்கீழ் இரண்டு நாள் பயணமாக நேற்றைய தினம் விழுப்புரம் வந்தடைந்தார் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். வேலூர், சேலம், மதுரை ஆகிய மாவட்டங்களை மையமாகக் கொண்டு வெவ்வேறு தினங்களில் நடைபெற்ற கள ஆய்வைத் தொடர்ந்து… தற்போது விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய மாவட்டங்களுக்கான முதலமைச்சரின் கள ஆய்வு விழுப்புரத்தில் நடைபெற்று வருகிறது.

நேற்று காலை சென்னையிலிருந்து புறப்பட்ட ஸ்டாலின், செங்கல்பட்டு மாவட்டத்தில், பரனூர் – அரசு தொழுநோய் மறுவாழ்வு மையத்தில் ஆய்வு மேற்கொண்டார். அதன்பிறகு, விழுப்புரம் மாவட்டத்துக்கு வந்தவர், ஒலக்கூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் திடீர் ஆய்வு நடத்தினார். அதைத் தொடர்ந்து, விழுப்புரம் நோக்கி புறப்பட்ட அவருக்கு, விழுப்புரம் வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட தி.மு.க சார்பாக வழிநெடுக்கிலும் வரவேற்பு அளிக்கப்பட்டது.
மதியம், விழுப்புரம் அரசு விருந்தினர் மாளிகைக்கு வந்தடைந்த அவர், மாலை 5 மணியளவில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்தார். அப்போது மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயச் சங்கப் பிரதிநிதிகள், மீனவச் சங்கப் பிரதிநிதிகள், சுய உதவிக்குழுக்கள், தொழில் முனைவோர்கள் மற்றும் இதர பிரதிநிதிகளுடன் கலந்துரையாடினார். அதன் பின்னர், சட்ட ஒழுங்கு தொடர்பாக, மூன்று மாவட்டக் காவல்துறை தலைவர்கள் மற்றும் ஆட்சியர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடத்தினார்.

இந்தக் கூட்டத்தில், முதலமைச்சர் பேசியதாக செய்தி மக்கள் தொடர்புத்துறை வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில், “இன்றைய தினம் தமிழ்நாட்டுக்குப் பல்வேறுவிதமான புதிய தொழில் முதலீடுகள் எல்லாம் வந்துகொண்டிருக்கின்றன. இதற்கு காரணம், நமது மாநிலம் அமைதியாக இருக்கிறது. சட்டம் ஒழுங்கு முறையாகப் பராமரிக்கப்படுகின்றது என்பதுதான். அதற்கு நீங்களெல்லாம் (காவல்துறை) அடித்தளமாக இருந்து கொண்டிருக்கிறீர்கள். அதே நேரத்தில் சில சமயங்களில் சிறுபிரச்னைகளுக்குகூட, ஆரம்பக் கட்டத்தில் சரியான நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், அதுவே பின்னர் பெரிய பிரச்னையாக போய்விடுகிறது.
அந்தப் பிரச்னைகள் குறித்த செய்திகள் மிக வேகமாக பரவிவிடுகின்றன. எனவே, சிறு சம்பவங்கள்கூட கவனமாக கண்காணிக்கப்பட வேண்டும் என்பதில்தான் நீங்களெல்லாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அதேபோல், காவல்துறையினரும், மாவட்ட ஆட்சியர்களும் சமூக ஊடகங்களின் வீச்சினையும், அவை ஏற்படுத்தக்கூடிய தாக்கத்தினையும் உணர்ந்து செயல்பட வேண்டும். மாவட்ட அளவிலான முக்கிய வழக்குகளில், நீங்கள் மேற்கொண்ட நடவடிக்கைகளை ஊடகங்களுக்கு அளிப்பதால் அவை குறித்த வதந்திகள் பரப்பப்படுவது தவிர்க்கப்படும்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில், சாதி – மத மோதல்கள், கூட்டு வன்முறைகள், திட்டமிட்ட கலவரங்கள் ஆகியவை சமீபகாலங்களில் நிகழவில்லை. இந்த நிலை தொடரும் வகையில், நீங்கள் ரோந்துப் பணிகளைப் பரவலாக்குவதோடு, உயர் அலுவலர்கள் களப்பணியில் ஈடுபட வேண்டும். இளைஞர்கள், போதைப்பொருள்களுக்கு அடிமையாகாமல் தடுக்க வேண்டியது காவல்துறையின் கடமை. இதில், மாவட்ட ஆட்சியர்களின் பங்கும் முக்கியமானது. போதைப்பொருள்களுக்கு எதிராக மிகமிகக் கடுமையான நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்பட வேண்டும். இது தமிழ்நாட்டின் எதிர்காலம் சம்பந்தப்பட்டது.
பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்பு மிகமிக முக்கியமானதாகும். இவர்களின் பாதுகாப்புக்கு காவல்துறை முழுமையாகப் பொறுப்பேற்க வேண்டும். சமூக குற்றங்கள், போதைப்பொருள் குற்றங்களை உங்கள் எல்லைக்குள் நடக்காமல் பார்த்துக் கொண்டாலே மாவட்டத்தில் முழுமையாக அமைதியை நிலைநாட்டிவிட முடியும். காவல் நிலைய மரணங்கள் இந்த ஆண்டில் இல்லை என்ற சூழலை உருவாக்கியிருக்கிறோம். இது தொடர வேண்டும். இதற்கு காவல் கண்காணிப்பாளர்களின் கவனமான கண்காணிப்பு தேவை.

பொதுமக்கள் பயமின்றி புகார் அளிக்கும் வகையில் உங்கள் காவல் நிலையங்கள் செயல்பட வேண்டும். `காவல்துறை உங்களின் நண்பன்’ என்ற வாசகத்தை நாம் சொல்லாமல், `காவல்துறை எங்கள் நண்பன்’ என்று பொதுமக்கள் சொல்லும் அளவுக்கு நாம் நடந்துக்கொள்ள வேண்டும். அந்த நம்பிக்கையுடன் விடைபெறுகிறேன்” என்று பேசியதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இன்றைய தினம் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெறவிருக்கும் ஆய்வுக்கூட்டத்தில்… பொன்முடி, கே.என்.நேரு, உதயநிதி உள்ளிட்ட சுமார் 8 அமைச்சர்களும், 40-க்கும் மேற்பட்ட ஐ.ஏ.எஸ் பிரிவிலான முக்கிய அதிகாரிகளும் பங்கேற்கின்றனர்.