டெல்லியில் மத்திய சுகாதார துறை மந்திரி மன்சுக் மாண்டவியா செய்தியாளர்களிடம் நேற்று பேசும்போது, நாட்டில் அடுத்த 24 மாதங்களில் 157 புதிய செவிலியர் கல்லூரிகளை நிறுவுவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது என கூறியுள்ளார். இதன்படி, ரூ.1,570 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. மருத்துவ உபகரணங்கள் பிரிவுக்கான கொள்கைக்கும் அமைச்சரவை ஒப்புதல் அளித்து உள்ளது.
இதனால், மருத்துவ உபகரணங்கள் பிரிவானது அடுத்த 5 ஆண்டுகளில், தற்போதுள்ள ரூ.89,957 கோடியில் இருந்து, ரூ.4,08,897 கோடியாக வளர்ச்சி அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று அவர் கூறியுள்ளார். இதனால், ஒவ்வோர் ஆண்டும் கூடுதலாக 15,700 செவிலியர் படிப்பு முடித்த பட்டதாரிகள் வெளிவருவார்கள். நாட்டில் தரம் வாய்ந்த, போதிய மற்றும் சம அளவிலான செவிலியர் கல்வி கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.