முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவை அடுத்து அதிமுகவில் சலசலப்பு தொடங்கிவிட்டது. ஏழு ஆண்டுகள் கடந்த நிலையில் இன்னும் சர்ச்சை ஓய்ந்த பாடில்லை. முன்னதாக கட்சியின் அதிகாரத்தை கைப்பற்ற
முயற்சித்த சூழலில், நீதிமன்றத்தின் கணக்கு வேறு மாதிரியாக அமைந்தது. சிறை தண்டனையால் பொதுச் செயலாளர் நாற்காலியும், முதல்வர் கனவும் பறிபோனது.
எடப்பாடி கையில் பொறுப்பு
உடனே
கையில் பொறுப்பை ஒப்படைத்து விட்டு சசிகலா சிறை சென்றார். அதன்பிறகு நடந்த எதிர்பாராத திருப்புமுனை சம்பவங்களால் அதிமுகவில் சசிகலாவிற்கே இடமில்லாமல் போனது. கட்சியின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கியது மட்டுமின்றி, அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் நீக்கிவிட்டனர். பின்னர் ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டன.
சசிகலா நகர்வு
சிறையில் இருந்து வந்ததும் அதிகாரத்திற்கான போட்டியில் குதித்தார். இருப்பினும் தீவிர அரசியலை முன்னெடுக்காமல் வேறு வழிகளை கையாண்டார். தொண்டர்கள் உடன் தொலைபேசி உரையாடல், நேரில் சந்தித்து பேசுதல், சுற்றுப்பயணம் என காய்களை நகர்த்தினார். ஆனால் எதுவும் பெரிதாக எடுபடவில்லை. இதற்கிடையில் நீதிமன்றத்தின் கதவுகளையும் தட்ட நினைத்தார்.
நீதிமன்றத்தில் வழக்கு
அதன்படி, அதிமுக பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கியதை எதிர்த்து சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் சசிகலா வழக்கு தொடர்ந்தார். உடனே ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் நிராகரிப்பு மனுக்களை தாக்கல் செய்தனர். இதனை ஏற்றுக் கொண்டு சசிகலாவிற்கு அடிப்படை முகாந்திரம் இல்லை எனக் கூறி வழக்கை முடித்து வைத்தது.
செம்மலை அதிரடி
இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். வழக்கின் மதிப்பிற்கு ஏற்ப நீதிமன்ற கட்டணம் செலுத்த உத்தரவிட வேண்டும் என்றும், இல்லையெனில் சசிகலாவின் மேல்முறையீட்டு வழக்கை நிராகரிக்க வேண்டும் என்றும் கூறி அதிமுக அமைப்பு செயலாளர் செம்மலை மனு தாக்கல் செய்தார். இதுதொடர்பான விசாரணையில், பதிவுத் துறையில் சரி பார்த்த பின்னர் தான் வழக்கு தாக்கல் செய்ததாக சசிகலா தரப்பு தெரிவித்தது.
கேவியட் மனு
இதனை ஏற்றுக் கொண்டு செம்மலையின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் செம்மலை மேல்முறையீடு செய்தார். இந்த விவகாரத்தில் சசிகலா தரப்பு இன்று (ஏப்ரல் 27) கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது. அதாவது, தன்னை கேட்காமல் வழக்கில் எந்தவித உத்தரவும் பிறப்பிக்க வேண்டாம் எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.
என்ன தான் நீதிமன்றத்தில் முட்டி மோதினாலும் தற்போதைய சூழலில் எடப்பாடியின் கைகள் தான் ஓங்கியிருக்கின்றன. நீதிமன்றமும் சரி, தேர்தல் ஆணையமும் சரி. அதிமுக பொதுச் செயலாளராக இவரைத் தான் அங்கீகரித்துள்ளன. இத்தகைய சூழலில் சசிகலாவின் கனவு பலிக்குமா என்பது மில்லியன் டாலர் கேள்வியாக மாறியுள்ளது.