சாத்தூர்: 11-ம் நூற்றாண்டு கல்வெட்டு – நீர் மேலாண்மைக்கு முக்கியத்துவம் தந்த முன்னோர்கள்!

விருதுநகர் மாவட்டம் சாத்தூருக்கு அருகே 10 கி.மீ. தொலைவில் உள்ளது கோல்வார்பட்டி. இந்தக் கிராமத்தில் அர்ஜுனா நதிக்கரையில் நூறு ஆண்டுகளுக்கும் மேல் பழைமையான புகழ்பெற்ற மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம் உள்ளது. இந்த சிவன் கோயிலுக்கு நேர் எதிரே உள்ள இடத்தில் உருளை வடிவிலான குமிழ்த்தூண் ஒன்றில் 11-ம் நூற்றாண்டைச் சேர்ந்த பாண்டியர்காலக் கல்வெட்டு ஒன்று கண்டறியப்பட்டுள்ளது.

தூண் கல்வெட்டு

இதுகுறித்து சாத்தூர் ராமசாமி நாயுடு ஞாபகார்த்தக் கல்லூரியின் விலங்கியல்துறை பேராசிரியரும், பாண்டியநாட்டு வரலாற்று ஆய்வு மையத் தொல்லியல் ஆய்வாளருமான ரவிச்சந்திரனிடம் கேட்டோம்.

“கோல்வார்பட்டி என அழைக்கப்படும் இந்த ஊரில் சிவன் கோயிலில் இருக்கும் கி.பி. 1612-ம் ஆண்டை சேர்ந்த நாயக்கர்கால கல்வெட்டு ஒன்றில் இருஞ்சோனாட்டு கூடறக்குடியான கோல்வார்பட்டி எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது கண்டறியப்பட்டுள்ள 11-ம் நூற்றாண்டைச் சேர்ந்த குலசேகர பாண்டியனின் 16வது ஆட்சி ஆண்டில் வெட்டப்பட்ட இக்கல்வெட்டிலும் ‘இருஞ்சோநாட்டு கூடற்குடி’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோல், முற்காலப் பாண்டியர் காலத்திலும் இவ்வூர் கூடற்குடி என அழைக்கப்பட்டதை கழுகுமலை சமண்பள்ளியில் உள்ள முற்கால பாண்டிய மன்னனின் பராந்தக வீரநாராயணன் கல்வெட்டுக்கள் மூலமும் அறிய முடிகிறது.

‘கூடற்குடி’ என்பது, முன்னர் காலத்தில் இந்த ஊரின் பெயராகும். அதாவது, கௌசிகா நதியும், அர்ஜூனா நதியும் கூடல் செய்யும் இடமாக இவ்வூர் விளங்கியிருக்கக்கூடும். அதன்பொருட்டு சங்க காலங்களில் இவ்வூர் கூடற்குடி எனும் பெயரோடு அழைக்கப்பட்டிருக்கிறது. நாளடைவில் மருவி கோல்வார்பட்டி என பெயர்மாற்றம் அடைந்தது.

ரவிச்சந்திரன்

தற்போது கிடைத்துள்ள இந்தக் கல்வெட்டின்படி 11-ம் நூற்றாண்டிலேயே நமது முன்னோர்கள் நீர்மேலாண்மைக்கு சிறப்பு செய்திருப்பதை அறியமுடிகிறது. அதன்படி, சிவபெருமானுக்குச் சிறப்பு செய்யும் விதமாக அங்கு அமைக்கப்பட்ட குளத்தின் தெற்கில் கருஞ்செய்யான கரிசல் நிலத்திற்கும், செவஞ்செய்யான செவல் நிலத்திற்கும் நீர் பாயும் விதமாக மடை ஒன்று அமைக்கப்பட்ட செய்தியை இந்தக் கல்வெட்டு தெரிவிக்கிறது.

கல்வெட்டு

இந்தக் கல்வெட்டின் மூலமாக ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாகவே நீர் மேலாண்மைக்கு நமது முன்னோர்கள் முக்கியத்துவம் தந்திருப்பதை அறிய முடிகிறது. இந்தச் செய்தி கல்வெட்டு வெளியே தெரியும்படியான உயரத்தில் எழுதப்பட்டிருப்பதாகும். இன்னமும் ஏழு முதல் எட்டு அடி வரை கல்வெட்டு மண்ணுக்குள் புதைந்திருப்பதாகக் கருதுகிறேன். எனவே, கல்வெட்டை முழுவதுமாக படிக்க முடிந்தால் அதில் சொல்லப்பட்டிருக்கும் செய்தியை மிகத் தெளிவாக எடுத்துரைக்க முடியும்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.