புதுச்சேரி: கடந்த புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது இந்தியாவிலேயே அதிகம் தேடப்படும் நகர பட்டியலில் புதுச்சேரி முதலிடம் பிடித்திருந்தது. எனவே சுற்றுலாவை மேம்படுத்தி அதிகளவு வருவாயை ஈட்ட புதுச்சேரி சுற்றுலாத்துறை பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து வருகிறது. பல்வேறு நாடுகளில் உள்ள சுற்றுலா ஏற்பாட்டாளர்கள், சுற்றுலா நிறுவனங்களிடம் பேக்கேஜ் சுற்றுலாவுக்காக தொடர்ந்து பேச்சுவார்த்தையும் நடத்தி வருகின்றது.
அடுத்த கட்டமாக,உலக அளவில் கவனம் ஈர்த்து வரும் துபாய் அரேபிய பயண சந்தை கண்காட்சியில் புதுச்சேரியின் சுற்றுலா வாய்ப்புகளை முன்னிலைப்படுத்தி, சர்வதேச அளவில் சுற்றுலா பயணிகளை ஈர்க்க அரசு திட்டமிட்டுள்ளது.
இந்தாண்டிற்கான அரேபிய பயண சந்தை கண்காட்சி வரும் 2ம் தேதி துவங்கி, 5ம் தேதி வரை நடக்கிறது. இதில் எம்.எல்.ஏ.,க்கள் சுற்றுலாவாக அழைத்து சென்று பங்கேற்க அரசு அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறது. மொத்தமுள்ள 33 எம்.எல்.ஏ.,க்களில் 28 பேர் பங்கேற்க இதுவரை இசைவு தெரிவித்துள்ளனர். இதற்கான ஒருங்கிணைப்பு பணிகளை சுற்றுலாத் துறை முடுக்கிவிட்டுள்ளது.
சர்வதேச அரேபிய பயண சந்தை கண்காட்சியில் இந்தியா ஸ்டாலில், புதுச்சேரி அரங்கும் இடம் பெறுகிறது.
இந்த அரங்கில் புதுச்சேரியின் பாரம்பரியமிக்க வரலாறு, சுற்றுலா இடங்கள், தங்குமிடங்கள், சுற்றுலா ஏற்பாட்டாளர்கள் ஒருங்கிணைப்பு, புதுச்சேரி அரசின் ஒத்துழைப்பு குறித்து விளக்கப்பட உள்ளது.
அத்துடன் துபாய் முழுவதும் புதுச்சேரி எம்.எல்.ஏ.,க்கள் பயணித்து,உலகளவில் உள்ள சுற்றுலா வளர்ச்சி போக்கு, நவீன சுற்றுலா திட்டங்கள், நாடுகளுக்கு இடையிலான சுற்றுலா குறித்தும் தெரிந்து கொள்ள உள்ளனர்.
துபாயின் முக்கிய மசூதி, பாரம்பரியமிக்க இடங்களையும் சுற்றி பார்த்து அங்குள்ள வளர்ச்சி குறித்தும்ஆய்வும், கலந்துரையாடவும் உள்ளனர்.

அரேபிய பயண சந்தையின் சிறப்பு
ஏ.டி.எம்., எனப்படும் அரேபிய பயணச் சந்தை, மத்திய கிழக்கில் உள்வரும் மற்றும் வெளிச்செல்லும் சுற்றுலா வல்லுநர்களுக்கு ஒரு தளத்தை வழங்குவதற்காக ஆண்டுதோறும் துபாயில் நடக்கும் கண்காட்சியாகும்.இக்கண்காட்சியில் உலகளாவிய சுற்றுலா தலங்கள், தங்குமிட விருப்பங்கள், விமானத் தொழில் உள்பட பல்வேறு தகவல்கள் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் 83 நாடுகளில் இருந்து 2,700 கண்காட்சியாளர்களுடன் பிரமாண்டமாக நடத்தப்படுகிறது.
அரேபிய பயண சந்தையின் சிறப்பு
ஏ.டி.எம்., எனப்படும் அரேபிய பயணச் சந்தை, மத்திய கிழக்கில் உள்வரும் மற்றும் வெளிச்செல்லும் சுற்றுலா வல்லுநர்களுக்கு ஒரு தளத்தை வழங்குவதற்காக ஆண்டுதோறும் துபாயில் நடக்கும் கண்காட்சியாகும்.இக்கண்காட்சியில் உலகளாவிய சுற்றுலா தலங்கள், தங்குமிட விருப்பங்கள், விமானத் தொழில் உள்பட பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொள்ளப்படுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் 83 நாடுகளில் இருந்து 2,700 கண்காட்சியாளர்களுடன் பிரமாண்டமாக நடத்தப்படுகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்