ஹைதராபாத்”என் தந்தையை கொன்ற முன்னாள் எம்.பி., விடுதலை செய்யப்பட்டது தவறான முன்னுதாரணம்; அவரை மீண்டும் சிறையில் தள்ள வேண்டும்’ என, மறைந்த ஐ.ஏ.எஸ்., அதிகாரியின் மகள் பிரதமர், ஜனாதிபதி ஆகியோருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
பீஹாரில், முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கூட்டணி ஆட்சி நடக்கிறது.
இங்கு, 1994ல் கோபால்கஞ்ச் மாவட்ட கலெக்டராக இருந்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி கிருஷ்ணய்யா மர்ம நபர்களால் கொல்லப்பட்டார்.
இந்தக் கொலை வழக்கில், தாதாவாக இருந்து அரசியல்வாதியாக மாறிய ராஷ்ட்ரீய ஜனதா தள முன்னாள் எம்.பி., ஆனந்த் மோகன் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கை விசாரித்த மாவட்ட நீதிமன்றம், 2007ல் ஆனந்த் மோகனுக்கு மரண தண்டனை விதித்தது. இவர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த பாட்னா உயர் நீதிமன்றம், தண்டனையை குறைத்து ஆயுள் தண்டனையாக மாற்றியது.
இந்நிலையில், சிறை விதிகளை மாற்றியமைத்த பீஹார் மாநில அரசு, ஆனந்த் மோகன் உட்பட 27 பேரை விடுதலை செய்ய சமீபத்தில் உத்தரவிட்டது.
இதையடுத்து, பீஹார் சஹர்ஷா சிறையில் இருந்த ஆனந்த் மோகன் நேற்று விடுதலை செய்யப்பட்டார். இதற்கு தெலுங்கானாவில் வசிக்கும் கிருஷ்ணய் யாவின் மகள் பத்மா அதிருப்தி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:
கொலை செய்துவிட்டு சிறை சென்றாலும் அரசியலில் சேர்ந்தால் விரைவில் விடுதலையாகி விடலாம் என்பதையே இது காட்டுகிறது.
இது போன்ற செயல்களை பீஹார் முதல்வர் ஊக்குவிக்கக் கூடாது.
இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும். இந்த விவகாரத்தில் மேல்முறையீடு செய்ய திட்டமிட்டுள்ளோம். ஆனந்தை மீண்டும் சிறையில் அடைக்க பிரதமர், ஜனாதிபதி ஆகியோரிடம் முறையிடவும் முடிவு செய்துள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்