“நடப்பாண்டில் மிக மோசமாக உள்ள வாய்க்கால்கள் தூர்வாரப்படும்” – அமைச்சர் துரைமுருகன்

தஞ்சாவூர்: “நடப்பாண்டில் மிக மோசமாக உள்ள வாய்க்கால்கள் தூர்வாரப்படும்” என்று நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.

காவிரி டெல்டா மாவட்டங்களில் சிறப்பு தூர்வாரும் பணியின் துவக்கமாக, தஞ்சாவூர் மாவட்டம், பூதலூரில் ஆனந்த காவேரி வாய்க்காலில் தூர் வாரும் பணியை இன்று நீர்வளர்த்துறை அமைச்சர் துரைமுருகன் தொடங்கி வைத்தார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நிகழாண்டு 12 மாவட்டங்களில் தூர் வாருவதற்காகத் தமிழக அரசு ரூ.90 கோடி நிதி ஒதுக்கீடு தந்துள்ளது. இந்த 12 மாவட்டங்களில் எந்தெந்த வேலையை எடுத்து செய்வது என முன்கூட்டியே அலுவலர்கள் முடிவு செய்துள்ளனர். இதில் எல்லா வேலைகளும் எடுத்துக் கொள்ளப்படவில்லை.

அத்தியாவசியமான மற்றும் உடனடியாக செய்ய வேண்டிய பணிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆனந்த காவேரி வாய்க்காலுக்கு தூர்வாருவதற்காக ரூ.25 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த முறை மிக மோசமாக உள்ள வாய்க்கால்கள் தூர் வாரப்படும்.

இந்த முறை 834 மண் அள்ளும் இயந்திரங்களைக் கொண்டு 4 ஆயிரத்து 773 கி.மீ. நீளத்துக்கு தூர் வாரப்பட உள்ளது. கடந்த ஆண்டு தூர் வாரும் பணியை நீர்வளத்துறை அலுவலர்கள் மட்டுமல்லாமல், அந்தந்த மாவட்ட ஆட்சியரின் பார்வையில் நடைபெற்றது. நீர்வளத் துறைச் செயலரும், மாவட்ட ஆட்சியர்களும் மற்ற அலுவலர்களைத் தொடர்பு கொண்டு பணிகள் செய்தது மட்டுமல்லாமல், ஒவ்வொரு மாவட்டத்துக்கும் மூத்த ஐ.ஏ.எஸ். அலுவலர்களைப் பார்வையாளர்களாக அனுப்பி வேலைகளைக் கவனிக்குமாறு தமிழக முதல்வர் உத்தரவிட்டார்.

கடந்த முறை தூர் வாரும் பணி மக்கள் பாராட்டும் வகையில் அமைந்ததுபோல, இந்த முறையும் செய்ய வேண்டும் என தமிழக முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். பாசனதாரர்களும் பாராட்டும் வகையில் தூர் வாரும் பணி அமையும். நிகழாண்டில் உரிய நேரத்தில் மேட்டூர் அணை திறக்கப்படும் என்றார்.

“தூர்வாரும் பணிகள் எப்போது நிறைவடையும்” என செய்தியாளர் கேட்டதற்கு, “தூர்வாரிய பின்னர் பணிகள் நிறைவடையும்” என நக்கலாக துரைமுருகன் பதிலளித்தார்.

நிகழ்வில், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தமிழக அரசின் தலைமை கொறடா கோவி.செழியன், எம்எல்ஏக்கள் துரை.சந்திரசேகரன், டிகேஜி.நீலமேகம், க.அண்ணாதுரை, முன்னாள் அமைச்சர் உ.மதிவாணன், நீர் வளத் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலர் சந்தீப் சக்சேனா, மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், நீர் வளத் துறைத் திருச்சி மண்டலத் தலைமைப் பொறியாளர் எஸ்.ராமமூர்த்தி, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.