மண்டியா: மத அடிப்படையிலான இட ஒதுக்கீடு என்பது நாட்டின் அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது என உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
கர்நாடக தேர்தல் பிரச்சார கூட்டத்தில் முதன் முதலாக நேற்று பங்கேற்று பேசிய ஆதித்யநாத் இதுகுறித்து மேலும் கூறியது: மத அடிப்படையில் வழங்கப்படும் எந்தவொரு இட ஒதுக்கீடும் நாட்டின் அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரான நடவடிக்கையாகவே பார்க்கப்படும். இந்த விவகாரத்தில் காங்கிரஸின் நிலைப்பாடு கண்டனத்துக்குரியது.
மத்தியிலும், மாநிலத்திலும் பாஜக ஆட்சியில் உள்ளதையடுத்து உத்தரபிரதேசத்தில் இரட்டை இயந்திர அரசு காரணமாக கடந்த 6 ஆண்டுகளில் எந்த கலவரமும் ஏற்படவில்லை.
பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவை (பிஎப்ஐ) திருப்திப்படுத்துவதற்காகவே மத அடிப்படையிலான இடஒதுக்கீட்டிற்கு காங்கிரஸ் ஆதரவளித்து வருகிறது. இது இந்திய அரசியல் சாசனத்துக்கு முற்றிலும் எதிரானது. அதேநேரம், பிஎப்ஐ அமைப்புக்கு நாடு முழுவதும் தடைவிதித்து பாஜக எடுத்த நடவடிக்கை இஸ்லாமிய அமைப்பின் செயல்பாட்டை பலவீனமாக்கியுள்ளது.
இன்னொரு பிரிவினை..: இந்தியா 1947-ல் மத அடிப்படையில் பிரிவினைக்கு உள்ளானது. இதனால், மத அடிப்படையிலான இடஒதுக்கீட்டை அங்கீகரிக்க முடியாது. அத்துடன் மற்றொரு பிரிவினைக்கு நாங்கள் தயாராக இல்லை. இவ்வாறு முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.