பெங்களூர்:
பிரதமர் நரேந்திர மோடியை விஷப்பாம்புடன் ஒப்பிட்டு அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விமர்சித்தது பாஜகவினரை கொந்தளிக்க செய்துள்ளது.
கர்நாடகாவில் தேர்தல் நெருங்குவதை ஒட்டி அங்கு அரசியல் கட்சிகளின் பிரச்சாரங்கள் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளன. பாஜக, காங்கிரஸை சேர்ந்த முக்கிய தலைவர்கள் தற்போது அங்கு சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில், கர்நாடகா மாநிலம் கலபுர்கியில் காங்கிரஸ் பிரச்சார பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது.
இதில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுனே கலந்துகொண்டு உரையாற்றினார். அவர் பேசுகையில், “பாஜகவும், ஆர்எஸ்எஸும் மிகவும் மக்களை பிளவுப்படுத்தி அரசியல் லாபம் அடையும் இயக்கங்கள். மக்கள் ஒற்றுமையாக இருந்தால் பாஜகவுக்கு பிடிக்காது. மக்களை ஜாதி, மத ரீதியாக பிரிப்பதே அக்கட்சியின் சித்தாந்தம். குறிப்பாக, பிரதமராக இருக்கும் நரேந்திரமோடி கொடிய விஷப்பாம்பை போன்றவர். எந்த அளவுக்கு விஷம் இருக்கிறது என்றால், அது நக்கினாலே மக்கள் இறந்துவிடுவார்கள்” என மல்லிகார்ஜுன கார்கே பேசினார்.
கார்கேவின் பேச்சு சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதை கேட்டு பாஜகவினர் கொந்தளித்து வருகின்றனர். இதுகுறித்து கர்நாடகா முதல்வர் பசவராஜ் பொம்மை கூறுகையில், “மோடியை நேருக்கு நேராக நின்று ஜெயிக்கும் வலிமை காங்கிரஸுக்கு இல்லை. அந்த விரக்தியில் அவர்கள் பிரதமர் மோடியை விமர்சிக்கிறார்கள். கார்கேவின் புத்தியில்தான் விஷம் உள்ளது. அவர்களுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்” எனக் கூறினார்.
இந்நிலையில், கார்கேவின் இந்த பேச்சுக்கு பாஜக தலைவர்கள் பலரும் கடும் கண்டனத்தை பதிவு செய்து வந்தனர். இதனைத் தொடர்ந்து, தனது பேச்சுக்கு மல்லிகார்ஜுன கார்கே மன்னிப்பு கேட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “எனது பேச்சு யாரையாவது புண்படுத்தி இருந்தால் நான் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். எந்த தனிநபரையும் புண்படுத்தும் வகையில் நான் பேசவில்லை. பாஜக – ஆர்எஸ்எஸ்-ன் கொள்கையை தான் விஷப்பாம்புடன் நான் ஒப்பிட்டேன்” என அதில் கார்கே தெரிவித்துள்ளார்.