சென்னை : இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தற்போது விஜய்யின் லியோ படத்தை இயக்கி வருகிறார். இதன் சூட்டிங் விரைவில் சென்னையில் துவங்கவுள்ளது.
தற்போது சிங்கப்பூர் சலூன் என்ற படத்தில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ், ஆர்ஜே பாலாஜியுடன் இணைந்து நடித்து வருகிறார்.
இதனிடையே அடுத்ததாக அனிருத்துடன் இணைந்து லோகேஷ் புதிய படம் ஒன்றில் நடிக்க கமிட்டாகியுள்ளார்.
லோகேஷ் -அனிருத்தை இயக்கும் அன்பறிவ் : நடிகர் விஜய், த்ரிஷா, மிஷ்கின், சஞ்சய் தத் உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகி வரும் படம் லியோ. விஜய்யின் 67வது படமான இந்தப் படத்தின் சூட்டிங் கடந்த பிப்ரவரி மாதத்தில் துவங்கிய நிலையில், காஷ்மீரில் கடுமையான பனிப்பொழிவிற்கு இடையில் படத்தின் 50 நாட்கள் சூட்டிங்கை முடித்துக் கொண்டு படக்குழுவினர் சென்னை திரும்பினர்.தற்போது சென்னையில் அடுத்தடுத்த சூட்டிங்கை நடத்தி வருகின்றனர்.
இந்தப் படத்தின் சூட்டிங்கை மே மாதத்திற்குள் நிறைவு செய்து போஸ்ட் புரொடக்ஷனை துவக்கவும் படக்குழு திட்டமிடப்பட்டுள்ளது. படத்தின் ரிலீஸ் தேதியும் முன்னதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அனைத்தும் திட்டமிட்டபடி சிறப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது பொன்னியின் செல்வன் 2 படத்தின் பிரமோஷன்களில் பிசியாக உள்ள த்ரிஷா, மே மாதம் முதல் வாரத்தில் படத்தின் சூட்டிங்கில் இணையவுள்ளார்.

முன்னதாக யாரிடமும் அசிஸ்டெண்ட்டாக இல்லாத போதிலும், ஒரு படத்தை துவக்கினால், எந்த விஷயங்களையெல்லாம் திட்டமிட வேண்டும் என்ற வித்தை லோகேஷிற்கு கைவந்த கலையாக உள்ளது. ஒவ்வொருவரின் கால்ஷீட்டையும் எப்படி முறையாக பயன்படுத்துவது என்பதும் இவருக்கு தேர்ந்த வித்தையாக உள்ளது. காஷ்மீரில் சிறப்பான வகையில் திட்டமிட்டு சூட்டிங்கை முடித்துள்ளதால் தயாரிப்புத் தரப்பு மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.
இதனிடையே நடிப்பிலும் தனக்கிருக்கும் ஆர்வத்தை அவ்வப்போது வெளிப்படுத்தி வருகிறார் லோகேஷ். அடுத்ததாக ஆர்ஜே பாலாஜியின் சிங்கப்பூர் சலூன் படத்திலும் இவர் கெஸ்ட் ரோலில் நடிக்கவுள்ள நிலையில், தொடர்ந்து ஸ்டண்ட் மாஸ்டர்கள் அன்பறிவு இயக்கத்திலும் இவர் நடிக்க கமிட்டாகியுள்ளார். இந்தப் படத்தில் இவருடன் இணைந்து இசையமைப்பாளர் அனிருத்தும் நடிக்கவுள்ளார். இந்தப் படத்தின் முறையான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ள இந்தப் படத்தின் கதை, திரைக்கதை மற்றும் வசனத்தை லோகேஷ் கனகராஜே எழுதவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தப் படம் 70 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இயக்குநராக இருந்தபோதிலும் அவ்வப்போது தன்னுடைய நடிப்பிற்கான ஆர்வத்தை வெளிப்படுத்திவரும் லோகேஷ், முழுநீள படத்தில் நடிக்கிறார் எனும்போது, அது எந்த மாதிரியான ஸ்கிரிப்ட்டாக இருக்கும் என்பதில் ரசிகர்கள் இப்போதே ஆர்வம் காட்டி வருகின்றனர். தங்களை சிறப்பான ஸ்டண்ட் மாஸ்டர்களாக நிரூபித்துவரும் அன்பறிவ், இயக்குநர்களாக களமிறங்கவுள்ளதும் படத்திற்கான எதிர்பார்ப்பை எகிற செய்துள்ளது.