சென்னை : நடிகர் விஜய், த்ரிஷா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துவரும் படம் லியோ. லோகேஷ் -விஜய் கூட்டணி இந்தப் படத்தின்மூலம் இரண்டாவது முறையாக இணைந்துள்ளது.
இந்தப் படத்தின் சூட்டிங் 50 நாட்கள் கடுமையான பனிப்பொழிவிற்கிடையில் காஷ்மீரில் நடைபெற்று முடிந்த நிலையில், தற்போது சென்னையில் சூட்டிங் நடந்து வருகிறது.
தற்போது பொன்னியின் செல்வன் 2 படத்தின் பிரமோஷன்களில் உள்ள த்ரிஷாவும் மே மாதம் முதல் வாரத்தில் படத்தின் சூட்டிங்கில் இணையவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
லியோ படத்தின் பிரம்மாண்ட பாடல் : நடிகர்கள் விஜய், த்ரிஷா, மிஷ்கின், சஞ்சய் தத், அர்ஜுன், கவுதம் மேனன், பிரியா ஆனந்த் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துவரும் படம் லியோ. இந்தப் படத்தின் அறிவிப்பு கடந்த பிப்ரவரி மாதத்தில் வெளியிடப்பட்டு உடனடியாக படக்குழுவினர் காஷ்மீருக்கு சூட்டிங்கிற்காக பயணம் மேற்கொண்டனர். இவர்கள் தனி விமானம் மூலம் தங்களது பயணத்தை மேற்கொண்ட நிலையில், அந்த வீடியோவும் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
காஷ்மீரில் கடுமையான பனிப்பொழிவிற்கு இடையில் 50 நாட்கள் தொடர்ந்து சூட்டிங்கை முடித்துவிட்டு படக்குழு சென்னை திரும்பியது. காஷ்மீரில் படக்குழுவினர் பட்ட கஷ்டங்களையும் வீடியோவாக வெளியிட்டனர். இந்நிலையில் தற்போது சென்னையில் அடுத்தடுத்த கட்ட சூட்டிங்குகள் தொடர்ந்து திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது. சென்னை சூட்டிங்கில் அர்ஜுன், சஞ்சய் தத் உள்ளிட்டவர்கள் கலந்துக் கொண்டனர்.
நடிகை த்ரிஷா தற்போது பொன்னியின் செல்வன் 2 ப்ரமோஷன்களில் பிசியாக உள்ள நிலையில் வரும் மே மாதம் 1ம் தேதி முதல் அவர் மீண்டும் லியோ படத்தின் சூட்டிங்கில் இணையவுள்ளார். இந்நிலையில் இந்தப் படத்திற்காக பிரம்மாண்டமான அளவில் லோகேஷ், பாடல் ஒன்றை திட்டமிட்டுள்ளாராம். இந்தியன் படத்தில் வரும் கப்பலேறி போயாச்சு பாடலை மிஞ்சும் வகையில் மிகவும் பிரம்மாண்டமாக இந்தப் பாடல் திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தப் பாடலுக்காக 2000 டான்சர்கள் பயன்படுத்தப்பட உள்ளதாகவும் தினேஷ் மாஸ்டர் இந்தப் பாடலுக்கு நடன இயக்குநராக செயல்பட உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இதற்கென தமிழ்நாட்டில் மட்டுமில்லாமல் ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட யூனியன்களை சேர்ந்த டான்சர்களும் பயன்படுத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தப் பாடலுக்காக மே மாதம் 20ம் தேதி முதல் ஜுன் 1ம் தேதி வரை ரிகர்சல் செய்யப்பட உள்ளதாகவும் ஜுன் 2ம் தேதி துவங்கி 11ம் தேதி வரை பாடல் சூட் நடத்தப்படவுள்ளதாகவும் படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது.
அனிருத் இசையில் இந்தப் பாடல் விஜய்யின் கேரியரில் அடுத்த வாத்தி கம்மிங்காக இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. ஆனால் படத்தில் இந்த ஒரு பாடல்தான் என்றும் கூறப்பட்டுள்ளது. ஆனால் படத்தின் பாடல் உரிமை மிக அதிக விலைக்கு விற்கப்பட்டுள்ளதால் ஒரே பாடலுடன் நிறுத்தப்படாது என்றும் சினிமா விமர்சகர்கள் கணித்துள்ளனர். எது எப்படியோ விஜய்யின் கேரியரில் பெஸ்ட்டான பாடலை பார்க்க ரசிகர்கள் காத்திருக்கலாம்.