சென்னை: எப்படி விக்ரம் படத்தை பார்ப்பதற்கு முன்பாக கைதி படத்தை ஒரு முறை பார்த்து விடுங்க என லோகேஷ் கனகராஜ் சொன்னாரோ அதே போல பொன்னியின் செல்வன் 2வை பார்ப்பதற்கு முன்பாக பொன்னியின் செல்வன் 1ஐ பார்த்து விடுங்கள் என நடிகர் கார்த்தி ட்வீட் போட்டுள்ளார்.
பொன்னியின் செல்வன் படத்திற்காக கடந்த சில வாரங்களாக பல நகரங்களில் வித வித காஸ்ட்யூம்களில் பொன்னியின் செல்வன் ரசிகர்களை சந்தித்து வருகின்றனர்.
ஆனால், இந்த படத்தின் பிரம்மாண்டம் அளவுக்கு ப்ரமோஷனில் பெரிதாக எதுவும் ரசிகர்களை கவரவில்லை என்கிற விமர்சனங்களும் எழுந்துக் கொண்டு தான் இருக்கின்றன.
இந்நிலையில், பொன்னியின் செல்வன் 2வை பார்க்க தயாராக இருக்கும் உங்களுக்கு பொன்னியின் செல்வன் முதல் பாகம் பற்றிய ஒரு சின்ன அலசலை இங்கே கொடுக்க விரும்புகிறோம்..
பொன்னியின் செல்வன் கதை மாந்தர்கள்: இயக்குநர் மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்தில் சுந்தர சோழராக பிரகாஷ் ராஜ் நடித்துள்ளார். அவரது மூத்த மகன் ஆதித்த கரிகாலனாக சியான் விக்ரமும் மகள் குந்தவையாக த்ரிஷாவும் இளைய மகன் அருள்மொழி வர்மன் கதாபாத்திரத்தில் ஜெயம் ரவியும் நடித்துள்ளனர்.
தன அதிகாரி பெரிய பழுவேட்டரையராக சரத்குமார் அவரது தம்பி சின்ன பழுவேட்டரையராக பார்த்திபன் நடித்துள்ளனர்.
ஆதித்த கரிகாலன் தஞ்சையில் ஏதோ சூழ்ச்சி நடப்பதாக தெரிகிறது என்ன என்பதை அறிந்து கொள் என தனது நெருங்கிய நண்பரான வந்தியத்தேவனை அனுப்புகிறார் அந்த கதாபாத்திரத்தில் கார்த்தி நடித்துள்ளார்.
சோழ தேசத்தின் உண்மைமிகு ஒற்றன் ஆழ்வார்க்கடியான் நம்பியாக ஜெயராமும் மதுராந்தகனாக ரகுமானும் கோயிலில் சேவை செய்து வரும் அடியான் சேந்தன் அமுதனாக அஸ்வின் நடித்துள்ளார். படகோட்டி பெண் பூங்குழலியாக ஐஸ்வர்யா ராயும் பார்த்திபேந்திர பல்லவனாக விக்ரம் பிரபுவும் வானதியாக சோபிதா துலிபாலாவும் நடித்துள்ளனர்.
செம்பியன் மாதேவியாக ஜெயச்சித்ரா, ரவி தாசனாக கிஷோர், வரகுணனாக அர்ஜுன் சிதம்பரம், சோமன் சாம்பவனாக ரியாஸ் கான், இளம் வயது நந்தினியாக சாரா அர்ஜுன் , மொத்த சோழ தேசத்தையும் வீரபாண்டியன் நாசருக்காக பழி வாங்கும் நந்தினியாக ஐஸ்வர்யா ராய் நடித்துள்ளார். ஊமை ராணி கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராய் தான் நடித்துள்ளார் என்பதை முதல் பாகத்தின் கிளைமேக்ஸிலேயே ட்விஸ்ட் வைக்காமல் மணிரத்னம் விளக்கி விட்டார்.
பொன்னியின் செல்வன் முதல் பாக கதை: இப்படி ஏகப்பட்ட கதாபாத்திரங்களை கொண்டு உருவான இந்த பொன்னியின் செல்வன் படம் இரு பாகங்களாக உருவாகி உள்ளன. கடந்த ஆண்டு செப்டம்பர் 30ம் தேதி வெளியான பொன்னியின் செல்வன் முதல் பாகத்தின் கதை என்ன என்பது குறித்து இங்கே லேசாக பார்ப்போம்..
வானில் ஒரு எரி நட்சத்திரம் தோன்ற அது ராஜ குலத்தோன்றலை பழிவாங்கும் என நம்பப்படுகிறது. பார்த்திபேந்திர பல்லவன் மற்றும் வந்தியத்தேவன் உடன் இணைந்து ராஷ்ட்ரகூடர்களை போரில் வீழ்த்தும் ஆதித்த கரிகாலன் தஞ்சையில் ஏதோ சதி நடப்பதாக நினைத்துக் கொண்டு தனது வாள் உடன் வானர குல வீரன் வந்தியத்தேவனை தஞ்சைக்கு அனுப்புகிறான்.
தஞ்சையில் படுத்த படுக்கையாக இருக்கும் சுந்தரச் சோழருக்கு அடுத்து ஆட்சிக்கு வர வேண்டிய இளவரசன் ஆதித்த கரிகாலனுக்கு பதிலாக கண்டராதித்த சோழரின் மகன் மதுராந்தகனை ஆட்சியில் அமர்த்த பெரிய பழுவேட்டரையர் சிற்றரசர்கள் உடன் சேர்ந்து செய்யும் சதியை அறிந்து கொள்ளும் வந்தியத்தேவன் அந்த சேதியை குந்தவையை சந்தித்து சொல்கிறான்.
இலங்கையில் போர் புரிந்து வரும் தனது சகோதரர் அருள்மொழி வர்மனை அழைத்து வந்தால் தான் இந்த பிரச்சனைக்கு முடிவு வரும் என நினைக்கும் குந்தவை வந்தியத்தேவனை இலங்கைக்கு அனுப்புகிறாள்.
ஆதித்த கரிகாலனால் வீரபாண்டியன் கொல்லப்பட அதற்கு பழிவாங்கும் நோக்குடன் வயதான பெரிய பழுவேட்டரையரை திருமணம் செய்துக் கொண்டு தஞ்சையில் முகாமிட்டுள்ள நந்தினி ஆதித்த கரிகாலனையும் சோழர்களையும் அழித்து விட்டு அரியணையை பாண்டியர்கள் கைப்பற்ற சதி செய்து வருகிறாள்.
அவள் அனுப்பிய ஆபத் உதவிகள் இலங்கையில் இருந்து திரும்பும் வழியில் அருள்மொழி வர்மன் மற்றும் வந்தியத்தேவனை கப்பலில் வைத்து எரித்து விடுகின்றனர்.
கடலில் மூழ்கும் இருவரும் இறந்துப் போனதாக சோழ தேசத்துக்கு தகவல்கள் வருகின்றன. ஆனால், கடைசியில் அவர்களை காப்பாற்ற ஊமை ராணி கடலில் குதிக்கும் காட்சியும் அவளது முகமும் வில்லி நந்தினியின் முகமும் ஒரே மாதிரி இருப்பதை காட்டி செம ட்விஸ்ட் உடன் இரண்டாம் பாகம் ஏப்ரல் 28 2023 வரும் என முடித்து விட்டார் மணிரத்னம்.
நாளை வெளியாக உள்ள பொன்னியின் செல்வன் 2 படத்தை எப்படி எடுத்து இருக்கிறார் என்பதை காண ரசிகர்கள் பேரார்வத்துடன் உள்ளனர்.