நடிகர் சம்பத் ராமிற்குத் தமிழில் கிடைக்காத பெயரும், புகழும் இப்போது மலையாளத்தில் கிடைத்து வருகிறது. அங்கே வசூலை வாரிக் குவித்த ‘மாளிகாபுரம்’ படத்தில் வில்லனாக ஸ்கோர் செய்திருந்தார். அந்த வரவேற்பினால் இப்போது அங்கே படு பிஸியாக நடித்து வருகிறார். தவிர, ஹாலிவுட் படமான ‘தி கிரேட் எஸ்கேப்’, ‘கே.ஜி.எஃப்’ இயக்குநர் பிரசாந்த் நீலின் ‘சலார்’ என வியக்க வைக்கும் லைன்அப் வைத்திருக்கும் சம்பத் ராமிடம் பேசினேன்.

“கமல் சாரோட ‘விக்ரம்’ படம் ரிலீஸான நாலாவது நாள்ல இந்த ஹாலிவுட் பட அழைப்பு வந்தது. படத்தின் பெயர் ‘தி கிரேட் எஸ்கேப்’. ஹாலிவுட்டில் ஸ்டன்ட் இயக்குநரான சந்திப் ஜே.எல்., இதுக்கு முன்னாடி அங்கே ‘அவுட்ரேட்’னு ஒரு படம் இயக்கி நடிச்சிருந்தார். அந்த இயக்குநரோட நண்பரும், இந்தப் படத்தோட எடிட்டருமான ஜெய கிருஷ்ணா நட்பினால், இந்தப் புது படத்தில் நடிக்கக் கேட்டாங்க.
‘தி கிரேட் எஸ்கேப்’ அமெரிக்க படம்ன்னு சொன்னதும் எப்படியும் 20 நாளாவது வேலை இருக்கும். அமெரிக்கா போயிட்டு வரலாம்னு நினைச்சிருந்தேன். ஆனா, ‘சென்னையிலதான் ஷூட். இரண்டே இரண்டு நாள்கள் போதும்’ன்னு கேட்டாங்க. சரின்னு நடிச்சிட்டேன். பப் பின்னணியில் வரும் ஒரு பாடல்ல நடிச்சிருக்கேன். படத்துல பாபு ஆண்டனியும் நடிச்சிருக்கார். இந்தப் படம் தமிழ்லேயும் வருது.

இப்ப தெலுங்கு, கன்னடம்ல படங்கள் கைவசம் இருக்கு. ஆனா, மலையாளத்தில் நிறையப் படங்கள் பண்றேன். ‘மாளிகாபுரம்’க்கு முன்னாடி ‘சாலமன்’ன்னு ஒரு படம் பண்ணியிருந்தேன். அந்தப் படம் இப்பதான் ரிலீஸ் ஆகுது. அடுத்து ஆஷிப் அலியோடு ‘காசர்கோல்டு’ன்னு ஒரு படம் நடிச்சிருந்தேன். அதுவும் ரிலீஸுக்கு ரெடியாடுச்சு. அடுத்து பிரித்விராஜின் அண்ணன் இந்திரஜித் சுகுமார் சாரோட ஒரு படம், ‘பாக்யலட்சுமி’ன்னு ஒரு படம்ன்னு இப்படிப் பல படங்கள்ல நடிக்கறேன்.
‘கே.ஜி.எஃப்’ இயக்குநரின் ‘சலார்’ படத்துல ஸ்ரேயா ரெட்டியோட பாடிகார்டு மாதிரி ஒரு வலுவான கேரக்டர்ல நடிச்சிருக்கேன். படத்துல எனக்கு சோலோ சீன்களும் இருக்கு. இந்தப் படத்தோட படப்பிடிப்பும் முழுவதும் முடிஞ்சிடுச்சு” என்கிறார் சம்பத் ராம்.