கடலூரில் இரண்டு மீனவர் கிராமத்தினரிடையே ஏற்பட்ட மோதலில் அதிமுக பிரமுகர் பஞ்சநாதன் கொலை செய்யப்பட்ட வழக்கில் 10 பேருக்கு கடலூர் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது.
கடலூர் அருகிலுள்ள தேவனாம்பட்டினம் மற்றும் சோனாங்குப்பம் மீனவர்களுக்கு இடையே கடலில் சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன்பிடிப்பது தொடர்பாக மோதல் நிலவி வந்தது. இதுதொடர்பாக 2018ம் ஆண்டில் இருதரப்பினரும் நடுக்கடலில் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர்.
கரைக்குத் திரும்பிய பின்னர் தேவனாம்பட்டினம் மீனவர்கள் பயங்கர ஆயுதங்களுடன் சோனாங்குப்பம் கிராமத்திற்குள் புகுந்து தாக்குதல் நடத்தினர்.
இந்த மோதலை தடுக்க முயன்ற பஞ்சநாதன் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு கடலூர் கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. குற்றம்சாட்டப்பட்டிருந்த 21 பேரில், தினகரன் என்பவர் ஏற்கனவே இறந்துவிட்டார்.
மீதமுள்ள 20 பேரில் 10 பேரை குற்றவாளிகளாக அறிவித்த நீதிபதி பிரகாஷ், அவர்கள் அனைவருக்கும் ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டார். எஞ்சிய 10 பேர் விடுவிக்கப்பட்டனர். தீர்ப்பினைத் தொடர்ந்து இரு மீனவ கிராமங்களிலும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.