‘‘அரசியல் சாசனத்திற்கு ஆபத்து வந்தால் கட்சி பேதங்களை கடக்க வேண்டும்” – கமல்ஹாசன்

கோவை:“அரசியல் சாசனத்திற்கு ஆபத்து வருகையில் அதனைக் காப்பாற்ற கட்சி பேதங்களைக் கடந்து அனைத்து முயற்சிகளையும் நாம் முன்னெடுக்க வேண்டும். கர்நாடக தேர்தலில் பிரச்சாரம் செய்ய காங்கிரஸ் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது” என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

கோவையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் பாராளுமன்றத் தேர்தல் முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்தான கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்தில் கட்சியின் நிர்வாகக்குழு, செயற்குழு மற்றும் கோவை, சேலம் மண்டல நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.இதில் பேசிய கட்சித்தலைவர் கமல்ஹாசன், “தேர்தலுக்கு குறுகிய காலமே இருப்பதால் நேர்முகச் சிந்தனைகளோடு செயல்பட வேண்டிய நேரம் இது. உலகத்தில் சிறந்த சொல் ‘‘செயல்’’ என்பதை நாம் அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும்.

அரசியல் சாசனத்திற்கு ஆபத்து வருகையில் அதனைக் காப்பாற்ற கட்சி பேதங்களைக் கடந்து அனைத்து முயற்சிகளையும் நாம் முன்னெடுக்க வேண்டும்.கட்சியில் சிறப்பான களப்பணிகள் செய்வோர் அனைவரும் உரிய முறையில் அங்கீகரிக்கப்படுவார்கள்.

மற்றவர்களுக்கு தேவைப்படுவதை பூட்டி வைத்தால் அங்கு பூட்டு வேண்டும். ஆனால் மற்றவர்களுக்கு நல்ல பண்புகளை கொடுக்கும் வீடுகளுக்கு பூட்டு தேவையில்லை. திறந்த கதவு தான் என்னுடைய வீடு. என்னுடைய வீட்டில் குளியல் அறைக்குத்தான் கதவு இருக்கிறது” என்று பேசினார்.

தொடர்ந்து, இன்று காலை ராகுல் காந்தி தன்னிடம் அலைபேசியில் பேசியதாகவும், அத்துடன் கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் நடைபெற இருக்கும் கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய அழைப்புக்கடிதம் அனுப்பியதாகவும் குறிப்பிட்டார். அதுபற்றிய முடிவை தான் விரைவில் அறிவிப்பதாகவும் கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.