சென்னை:
கர்நாடகா மேடையில் தமிழ்த்தாய் வாழ்த்து பாதியில் நிறுத்தப்பட்டதுகண்டு இடிவிழுந்த மண்குடமாய் இதயம் நொறுங்கியது என்று கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். பாடலை ஒலிபரப்பாமல் இருந்திருக்கலாம்; பாதியில் நிறுத்தியது ஆதிமொழிக்கு அவமானம் என்றும் வைரமுத்து வேதனை தெரிவித்துள்ளார்.
கர்நாடகா மாநில சட்டசபை தேர்தல் மே மாதம் 10ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை தக்க வைக்கும் முனைப்பில் பாஜக செயல்பட்டு வருகிறது.
தமிழ்நாடு மாநில பாஜக தலைவரான அண்ணாமலையை கர்நாடகாவில் தேர்தல் பணி மேற்கொள்ள அக்கட்சி மேலிடம் நியமித்தது. பெங்களூர், பெங்களூர் புறநகர், மைசூர், சாம்ராஜ்நகர், சிவமொக்கா உள்பட பல மாவட்டங்களில் தமிழர்கள் அதிகமாக உள்ளனர். குறிப்பாக பெங்களூரில் சிவாஜி நகர், சாம்ராஜ்பேட்டை, காந்தி நகர், சாந்தி நகர் உள்பட சில தொகுதிகளில் வேட்பாளர்களின் வெற்றியை நிர்ணயிக்கும் சக்திகளாக தமிழர்கள் உள்ளனர்.
அதேபோல் பாஜகவின் முன்னாள் முதல்வரான எடியூரப்பாவின் சொந்த மாவட்டமான சிவமொக்காவிலும் ஏராளமான தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனர். சிவமொக்கா என்இஎஸ் மைதானத்தில் தமிழ் அமைப்புகளின் ஒருங்கிணைப்பு கூட்டம் தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழ் அமைப்புகளின் நிர்வாகிகள், பாஜகவின் சிட்டிங் எம்எல்ஏவான கேஎஸ் ஈஸ்வரப்பா மற்றும் பாஜக வேட்பாளர் சன்னபசப்பா உள்பட ஏராளமானவர்கள் பங்கேற்றனர்.
தமிழ் அமைப்புகளை ஒருங்கிணைக்கும் கூட்டம் என்பதால் தொடக்கத்தில் தமிழ்தாய் வாழ்த்து பாடம் ஒலிபரப்பு செய்யப்பட்டது. ‛நீராருங்கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்” என தொடங்கி தமிழ்தாய் வாழ்த்து பாடிக்கொண்டிருந்தபோதே மேடையில் எழுந்த நின்ற ஈஸ்வரப்பா எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து பாதியில் தமிழ்தாய் வாழ்த்து நிறுத்தப்பட்டது.
தமிழர்களின் ஆதரவை பெற நடைபெற்ற கூட்டத்தில் பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை பங்கேற்ற நிலையில், தமிழ்த்தாய் வாழ்த்து பாதியில் நிறுத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழ்த்தாய் வாழ்த்து பாதியில் நிறுத்தப்பட்டதற்கு பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து கவிஞர் வைரமுத்து பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.
அதில், கர்நாடகா மேடையில் தமிழ்த்தாய் வாழ்த்து பாதியில் நிறுத்தப்பட்டதுகண்டு இடிவிழுந்த மண்குடமாய் இதயம் நொறுங்கியது ஒலிபரப்பாமல் இருந்திருக்கலாம்; பாதியில் நிறுத்தியது ஆதிமொழிக்கு அவமானம் கன்னடத்துக்குள் தமிழும் இருக்கிறது; திராவிடத்திற்குள் கன்னடமும் இருக்கிறது மறக்க வேண்டாம் என்று பதிவிட்டுள்ளார்.