புதுச்சேரி: புதுச்சேரி மேட்டுப்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு படித்துவருபவர் பரத்குமார். இவர் அறிவியல் ஆசிரியை அனிதா வழிகாட்டுதலோடு எளிய தொழில் நுட்பத்தில் வெப்ப நிலை, காற்றின் ஈரப்பதம், மழை முன் அறிவிப்பு, காற்றழுத்தம் உள்ளிட்ட தகவல்களை தெரிவிக்கும் வானிலை சாதனம் ஒன்றை உருவாக்கியுள்ளார்.
இந்த சாதனத்தை பள்ளியில் நடந்த அறிவியல் கண்காட்சியில் மாணவர் பரத்குமார் காட்சிக் குவைத்தார். அது சிறந்த படைப்பாகத் தேர்வு செய்யப்பட்டது. தொடர்ந்து புதுச்சேரி பள்ளி கல்வித்துறை சார்பில் நடந்த மண்டல அறிவியல் கண்காட்சியில் நடுநிலை பிரிவில் இந்த சாதனத்துடன் அவர் பங்கேற்றார்.
இதில், பரத்குமார் உருவாக்கிய வானிலை சாதனம் 3-ம் பரிசுக்கு தேர்வானது. இதையடுத்து நடந்த பரிசளிப்பு விழாவில் மாணவர் பரத்குமாரை முதல்வர் ரங்கசாமி பாராட்டி பரிசு வழங்கினார். இது பற்றி மாணவர் பரத்குமார் கூறும்போது, மாறிவரும் காலநிலை பற்றி ஆராய திட்ட மிட்டேன். இதற்காக ஆசிரியை அனிதா வழிகாட்டுதலோடு தமிழக வானிலை ஆய்வாளர்களின் கட்டுரைகளைப் படித்து எளிய தொழில் நுட்பத்தில் வானிலை சாதனம் ஒன்றை உருவாக்க முடிவு செய்தோம்.
ஒரு வானிலை நிலையம் என்பது நம்மைச் சுற்றியுள்ள வளிமண்டல வெப்ப நிலை, காற்றழுத்தம் மற்றும் ஈரப்பதம் பற்றிய விவரங்களைத் தரும். அந்த விவரங்களை எளிய முறையில் பெற திட்டமிட்டு, ஐஓடி (இன்டர்நெட் ஆப் திங்ஸ்) என்ற நெட் வொர்க் மூலம் வானிலை சாதனத்தை உருவாக்கினோம். இந்த நெட் வொர்க் பல்வேறு மின்னணு சாதனங்களை இணைப்பதாகும்.
இத்திட்டத்திற்கு டிஹெச்டி11 (DHT11) சென்சார், பறக்கும் மீன் எம்க்யூ135 (MQ135) சென்சார்,பிஎம்பி 280 (BMP280) சென்சார், எல்டிஆர் சென்சார் உள்ளிட்டவை முக்கிய அம்சங்களாக உள்ளன.இந்த சாதனத்துடன் மிகவும் குறைந்த விலை வைபை தொகுப்புமற்றும் மற்ற அனைத்து சென்சார்கள் இணைக்கப்பட்டுள்ளன.
டிஹெச்டி11 சென்சார் என்பது வெப்ப நிலை மற்றும் ஈரப்பதத்தை உணரும் குறைந்த விலை டிஜிட்டல் சென்சார் ஆகும். பறக்கும் மீன் எம்க்யூ சென்சார் காற்றின் தர வாயு சென்சார் என்றும் அழைக்கப்படுகிறது. இது அம்மோனியா போன்ற தீங்கு விளைவிக்கும் வாயுக்களை கண்டறியும். பிஎம்பி 280 சென்சார் என்பது வளிமண்டல அழுத்தத்தை அளவிடும் ஒரு பாரோமெட்ரிக் பிரஷர் சென்சார் ஆகும்.எல்டிஆர் என்பது ஒரு ஒளி உணரி ஆகும். பகலின் தீவிரத்தின் அடிப்படையில் இது வேலை செய்கிறது.
இவ்வாறான எளிய தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட இந்த வானிலை நிலையத்தில் வெப்பநிலை, காற்றின் ஈரப்பதம், மழை முன் அறிப்பு, காற்றழுத்தம் உள்ளிட்ட தகவல்களை 4 மணி நேரத்துக்கு ஒருமுறை கணினியில் பதிவேற்றம் செய்து விடும். இதன் மூலம் வானிலை குறித்த தகவல்களை அறிந்து கொண்டு நம்முடைய பயணங்களை திட்டமிடலாம்.
எதிர்காலத்தில் காற்றில் உள்ள மாசு மற்றும் நுண் கிருமிகளை கண்காணித்து மனித வாழ்வு மேம்பட இந்த சாதனத்தை மேலும் சிறிய தாக்கி, பல இடங்களில் நுண் பருவநிலை பகுப்பாய்வு செய்ய திட்டமிட்டுள்ளேன் என்று தெரிவித்தார்.