புதுடெல்லி: ஒன்றிணைந்து பயங்கரவாதத்தை எதிர்க்க வேண்டும் என்று ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வலியுறுத்தியுள்ளார்.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்புக்கு இந்த ஆண்டு இந்தியா தலைமை வகிக்கும் நிலையில், அதன் பாதுகாப்பு மாநாடு புதுடெல்லியில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்றது. இந்தியா, சீனா, ரஷ்யா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், பாகிஸ்தான் ஆகிய நாடுகள் எஸ்சிஓ அமைப்பின் நிரந்தர உறுப்பு நாடுகளாக உள்ளன. பெலாரஸ், ஈரான் ஆகிய நாடுகள் பார்வையாளர் நாடுகளாக உள்ளன. இன்று நடைபெற்ற எஸ்சிஓ பாதுகாப்பு மாநாட்டில், பாகிஸ்தான் தரப்பில் பாதுகாப்புக்கான பிரதமரின் சிறப்பு உதவியாளர் மாலிக் அகமது கான் காணொலி வாயிலாகக் கலந்து கொண்டார்.
கூட்டத்தில் உரையாற்றிய ராஜ்நாத் சிங், ஐ.நா.வால் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பு, பாகிஸ்தானில் பொதுமக்களிடம் இருந்து நேரடியாக நிதி திரட்டுவது குறித்தும், அந்த நாடு அத்தகைய அமைப்புகளுக்கு உதவியாக இருப்பது குறித்தும் குறிப்பிட்டு குற்றம் சாட்டினார். அவரது உரை விவரம்: “ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாடுகள் அனைத்தும் ஒன்றிணைந்து பயங்கரவாதத்தை எதிர்க்க வேண்டும். எஸ்சிஓ வலிமையைப் பெருக்கி, பயங்கரவாதத்திற்கு எதிராக இணைந்து போராட வேண்டும். எஸ்சிஓ-வை வலிமையாக்கவும், அதற்கான பங்களிப்பை வழங்கவும் இந்தியா உறுதிபூண்டுள்ளது.
சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவது, மக்களிடம் நேரடியாக பணம் வசூலிப்பது என பயங்கரவாத அமைப்புகள் புதிய வழிமுறைகளைக் கையாண்டு வருகின்றன. ஐ.நா.வால் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான ஜெய்ஷ் இ முகம்மது அமைப்பு, பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் வெளிப்படையாக நிதி திரட்டுகிறது. பாகிஸ்தானின் பஞ்சாப், ஆக்கிரமிப்பு காஷ்மீர் உள்ளிட்ட பகுதிகளிலும் இதுபோல் அந்த அமைப்பு நிதி திரட்டுகிறது.
பயங்கரவாத நிதி தடுப்பு அமைப்பான FATF, கடந்த 2018-ம் ஆண்டு ஜூன் முதல் பாகிஸ்தானை கிரே பட்டியலில் வைத்திருந்தது. கடந்த ஆண்டு அக்டோபரில்தான் அந்த பட்டியலில் இருந்து பாகிஸ்தான் நீக்கப்பட்டது. பயங்கரவாத நிதி தடுப்புக்கான நடவடிக்கைகளை பாகிஸ்தான் எடுத்ததன் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால், கிரே பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதை அடுத்து, ஜெய்ஷ் இ முகம்மது அமைப்பு பாகிஸ்தானில் வெளிப்படையாக நிதி திரட்டி வருகிறது.
பாகிஸ்தான் அரசால் ஊக்குவிக்கப்பட்ட பயங்கரவாதிகள் மும்பை மீது தாக்குதல் நடத்தினார்கள். 3 நாட்களுக்கு இந்த தாக்குதல் நீண்டது. இதில், பலர் உயிரிழந்தார்கள். இந்த தாக்குதலின் பின்னணியில் இருந்தவர்கள் குறித்த தகவல்களை அளித்தும் பாகிஸ்தான் அவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது தொடர்பான இந்தியாவின் கோரிக்கையை பாகிஸ்தான் அரசு 14 ஆண்டுகளாக நிராகரித்து வருகிறது.
நமது பிராந்தியம் பாதுகாப்பானதாக, நிலையானதாக, வளமிக்கதாக இருக்க வேண்டுமானால் நாம் நமது திட்டம் மீது கவனமாக இருக்க வேண்டும். எஸ்சிஓ உறுப்பு நாடுகளில் மக்களின் வாழ்க்கைத் தரம் மேம்பட இது உதவும்” என்று ராஜ்நாத் சிங் பேசினார்.