கர்நாடக தேர்தல் | பிரதமர் மோடியை பழிப்பதன் மூலம் காங்கிரஸால் வெற்றி பெற முடியாது: அமித் ஷா

பெங்களூரு: பிரதமர் மோடியை பழிப்பதன் மூலம் கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியால் வெற்றி பெற்றுவிட முடியாது என்று பாஜக மூத்த தலைவரும் உள்துறை அமைச்சருமான அமித் ஷா தெரிவித்துள்ளார்.

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு நாவல்குண்டு தொகுதியில் நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் அமித் ஷா உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: “ஒரு பக்கம் ராகுல் காந்தியின் தலைமையில் காங்கிரஸ் கட்சி உள்ளது. மறு பக்கம், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாஜக உள்ளது. கர்நாடகா இரட்டை இஞ்ஜின்(மத்தியிலும் மாநிலத்திலும் பாஜக ஆட்சி) அரசை விரும்புகிறதா அல்லது ரிவர்ஸ் கீரில் செல்லக்கூடிய அரசை விரும்புகிறதா என்பதை இந்தத் தேர்தல் தீர்மானித்துவிடும்.

பிரதமர் நரேந்திர மோடியை உலகம் பாராட்டுகிறது; மதிக்கிறது. ஆனால், காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜூன கார்கே, சோனியா காந்தி, பிரியங்கா காந்தி போன்றவர்கள் அவரை அவமதித்து வருகிறார்கள். நமது பிரதமரை, விஷப் பாம்பு என்று மல்லிகார்ஜூன கார்கே விமர்சித்துள்ளார். நரேந்திர மோடியை திட்ட திட்ட அவர் ஒளிர்வார் என்பது காங்கிரஸ் தலைவர்களுக்குத் தெரியவில்லை. பிரதமர் மோடியை பழிப்பதன் மூலம் கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியால் வெற்றி பெற்றுவிட முடியாது.

காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது, அது விவசாயிகளுக்கு எந்த நன்மையையும் செய்யவில்லை. ஏனெனில், விவசாயிகள் மீது காங்கிரஸ் கட்சிக்கு மரியாதை கிடையாது. காங்கிரஸ் ஆட்சியில், விவசாயிகள் மீது தடியடி நடத்தப்பட்டது. அப்படிப்பட்டவர்களுக்கு, ஓட்டு கேட்க உரிமை இல்லை. ஆனால், விவசாயிகளுக்கு ஏராளமான நன்மைகளைச் செய்த கட்சி பாஜக. ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரால்தான் ஏழைகளின் வலியை உணர முடியும். மன்னர்களைப் போல் தங்களைக் கருதிக் கொள்ளும் காங்கிரஸ் கட்சியினரால் ஏழைகளின் வலியை ஒருபோதும் புரிந்து கொள்ள முடியாது.

பாபுலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பை தடை செய்து கர்நாடகாவின் பாதுகாப்பை உறுதி செய்தது பாஜக. காங்கிரஸ் ஆட்சியில் இந்த நடவடிக்கை எடுக்கப்படாதது ஏன் என்பதற்கு அந்தக் கட்சி பதில் சொல்ல வேண்டும்.” இவ்வாறு அமித் ஷா உரையாற்றினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.