மதுரை: சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு அருள் பாலிக்க அழகர்கோவிலில் இருந்து வருகை தரவுள்ள கள்ளழகரை வரவேற்க மண்டகப்படிகள் தயாராகி வருகின்றன.
சித்திரைத் திருவிழாவானது, மதுரை மாவட்ட மக்கள் மட்டுமின்றி, முன்பு ஒருங்கிணைந்த மதுரை மாவட்டத்தில் இருந்த திண்டுக்கல்,சிவகங்கை, ராமநாதபுரம், தேனி மாவட்ட மக்களும் சேர்ந்து கொண்டாடும் விழாவாகும். இந்த மாவட்டத்து மக்கள், இந்த திருவிழாவில் மீனாட்சியம்மன் கோயில் தேர்த் திருவிழா, பட்டாபிஷேகம், திருக்கல்யாணம், தினமும் நடைபெறும் சுவாமி உற்சவத்தை காணவும்,
வைகை ஆற்றில் எழுந்தருளும் கள்ளழகரை தரிசிக்கவும், மாட்டு வண்டிகளிலும், நடைபயணமாகவும் கூட்டம் கூட்டமாக மதுரையை நோக்கி வந்துள்ளனர். அவர்கள் கிட்டத்தட்ட 10 நாட்கள் மதுரையில் வைகை ஆற்றங்கரையோரங்களில் தங்கி, திருவிழாவை கண்டுள்ளனர். இவர்களுக்காக, மண்டகப்படிகளில் 3 வேளையும் அன்னதானம் வழங்கப்பட்டுள்ளது.
தாகத்துக்கு பழச்சாறு பானாக்கரம், நீர் மோர் மற்றும் சாப்பிடுவதற்கு புளியோதரை, பொங்கல் என ஏராளமான உணவு வகைகள் பரிமாறப்பட்டுள்ளன. இதற்காகவே, அக்காலத்தில் வசதி படைத்தவர்கள், அமைப்பினர், நிறுவனத்தினர் மதுரை நகர் பகுதியிலிருந்து அழகர்கோவில் வரை மண்டகப்படிகளை ஏற்படுத்தி, சித்திரைத் திருவிழா நாட்களில் மக்களின் பசியை போக்கும் சேவையில் ஈடுபட்டுள்ளனர்.
அழகர்கோவிலில் இருந்து வைகை ஆற்றுக்கு எதிர்சேவை வரும்போதும், திருவிழா முடிந்து அழகர்கோவில் செல்லும்போதும், இந்த மண்டகப்படிகளில் கள்ளழகர் தங்கி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். அவரை தரிசிக்க மண்டகப்படிகளில் மக்கள் திருவிழாபோல் திரள்வர். தற்போது, மீனாட்சியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா தொடங்கியுள்ள நிலையில், மதுரை திருவிழா கோலம் பூண்டுள்ளது.
கள்ளழகர் கோயில் சித்திரைத் திருவிழா, மே1-ம் தேதி தொடங்குகிறது. 4-ம் தேதி எதிர்சேவை, 5-ம் தேதி சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. மீனாட்சியம்மன் கோயில், அழகர்கோயில் ஆகிய இரு கோயில்களின் ஒருங்கிணைந்த விழாக்களாக நடைபெறும் சித்திரைத் திருவிழாவில், இந்துக்கள் மட்டுமில்லாது அனைத்து மதத்தினரும் பங்கேற்பர் என்பது தனிச்சிறப்பு.
அழகர்கோவிலில் இருந்து வரும் கள்ளழகரை எதிர் சேவை செய்து வரவேற்க மண்டகப்படிகள் தயாராகி வருகின்றன. மொத்தம் 450-க்கும் மேற்பட்ட மண்டகப்படிகள் உள்ளன. இதில், ஆண்டாண்டு காலமாக உள்ள பாரம்பரிய மண்டகப்படிகளும் அடங்கும். இந்த மண்டகப்படிகளுக்கு தற்போது வர்ணம் பூசி அலங்காரம் செய்யும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது.
மேலும், பக்தர்கள், பொதுமக்களுக்கு அன்னதானம், பிரசாதம், நீர்மோர் வழங்குவதற்கு தன்னார்வ அமைப்புகள், மண்டகப்படிதாரர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் ஏற்பாடுகளில் இறங்கியுள்ளனர். இந்த ஆண்டு, அன்னதானம் வழங்குபவர்களை முறைப்படுத்து வதற்காக உணவுப் பாதுகாப்பு துறையிடம் அனுமதி சான்று பெற்ற பிறகே சேவைகளில் ஈடுபட வேண்டும் என, மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.