சென்னை கோயம்பேட்டில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் தமிழ்நாடு டாஸ்மாக் நிறுவனத்தின் மூலம் தானியங்கி மதுபான விற்பனை மையம் தொடங்கப்பட்டுள்ளது. அந்த இயந்திரத்தில் பணம் செலுத்தினால் மதுபானம் பெறும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இயந்திரத்தினுள் பணம் செலுத்தினால் டாஸ்மாக்கில் விற்பனை செய்யப்படும் பிராந்தி, விஸ்கி, பீர் வகைகள் விநியோகம் செய்யப்படுகிறது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
இந்த நிலையில் டாஸ்மாக் மதுபான கடைகளில் கூடுதல் விலைக்கு மதுபானம் விற்கப்படுவதாக புகார் எழுந்ததையடுத்து சோதனை முறையில் 4 இடங்களில் மதுபானம் தரும் இயந்திரங்களை அமைத்துள்ளதாக டாஸ்மாக் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
இது குறித்து டாஸ்மாக் நிர்வாகம் அளித்துள்ள விளக்கத்தில் “சென்னையில் 4 எலைட் மதுபான கடைகளில் பணம் செலுத்தினால் மதுபானம் தரும் இயந்திரம் அமைக்கப்பட்டுள்ளது. சோதனை அடிப்படையில் 4 எலைட் மதுபான டாஸ்மார்க் கடைகளிலும் மதுபானம் வழங்கும் இயந்திரம் அமைக்கப்பட்டுள்ளது.
மதுபான பாட்டில்களுக்கு கூடுதல் பணம் வசூலிப்பதாக எழுந்த புகாரை அடுத்து மதுபானம் தரும் வெண்டிங் மெஷின் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் 18 வயது நிரம்பியவர்கள் மட்டுமே இயந்திரத்தில் இருந்து மதுபானம் பெற அனுமதிக்கப்படுவார்கள்” என டாஸ்மார்க் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.