சென்னை:
கர்நாடகாவில் பாஜக பொதுக்கூட்டத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் பாதியிலேயே நிறுத்தப்பட்ட விவகாரம் தொடர்பாக கவிஞர் வைரமுத்து போட்டுள்ள ட்வீட் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
அண்ணாமலை போட்ட பிளான்: சீமான் வழியில் அண்ணாமலை?
கர்நாடகா சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அங்குள்ள ஷிவமொக்கா நகரில் நேற்று மதியம் பாஜக சார்பில் பிரச்சாரப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் ஷிவமொக்கா பாஜக எம்எல்ஏ ஈஸ்வரப்பா, கர்நாடகா தேர்தல் பொறுப்பாராக நியமிக்கப்பட்டுள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.
நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பாக அங்கு தமிழ்த்தாய் வாழ்த்து ஒலிபரப்பட்டது. அங்கு தமிழர்கள் அதிக அளவில் வசிப்பதால் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் ஒலிபரப்பப்படுவது வழக்கம்.
இந்நிலையில், தமிழ்தாய் வாழ்தது ஒலித்துக் கொண்டிருந்த போது, திடீரென பாஜக எம்எல்ஏ ஈஸ்வரப்பா கையை உயர்த்தி பயங்கரமாக சத்தம் போட்டார். பின்னர், மைக் அருகே சென்ற அவர், யார் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை ஒலிபரப்பியது.. இது கர்நாடகா.. கன்னட கீதத்தை போடுங்கள்” எனக் கூறி கடுமையாக திட்டினார். உடனடியாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் பாதியிலேயே தமிழ்த்தாய் வாழ்த்தை நிறுத்தி, கன்னட நாட்டு கீதத்தை ஒலிக்கச் செய்தனர்.
இந்த சம்பவம் நிகழ்ந்த போது, அண்ணாமலை மேடையில் நின்று கொண்டிருந்தார். எனினும், தமிழ்த்தாய் வாழ்த்து நிறுத்தப்பட்டதற்கு அவர் எதிர்வினை ஏதும் ஆற்றவில்லை. கர்நாடகாவில் தமிழக பாஜக தலைவர் முன்பே தமிழ்தாய் வாழ்த்து அவமதிக்கப்பட்டது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வீடியோ சமூக வலைதளங்களிலும் வேகமாக பரவி பல்வேறு விமர்சனங்களை பெற்று வருகிறது.
இந்த சூழலில், இந்த சம்பவத்தை சுட்டிக்காட்டி தமிழ் திரைப்பட பாடலாசிரியர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று ஒரு பதிவை போட்டுள்ளார். அதில், “கர்நாடகா மேடையில் தமிழ்த்தாய் வாழ்த்து பாதியில் நிறுத்தப்பட்டதுகண்டு இடிவிழுந்த மண்குடமாய் இதயம் நொறுங்கியது. ஒலிபரப்பாமல் இருந்திருக்கலாம். பாதியில் நிறுத்தியது ஆதிமொழிக்கு அவமானம். கன்னடத்துக்குள் தமிழும் இருக்கிறது. திராவிடத்துக்குள் கன்னடமும் இருக்கிறது. மறக்க வேண்டாம்” என வைரமுத்து தனது பதவில் கூறியுள்ளார்.