கர்நாடக சட்டமன்றத் தேர்தல் வரும் 10-ம் தேதி நடக்கவிருக்கிறது. இந்த ஆட்சியில் எப்படியும் மீண்டும் ஆட்சியைத் தக்க வைக்க பா.ஜ.க தீவிர முனைப்பில் செயல்படுகிறது. இதற்கிடையில், தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கர்நாடக மாநில பா.ஜ.க தேர்தல் இணை பொறுப்பாளராகச் செயல்பட்டு வருகிறார். கர்நாடகாவில், பெங்களூர் புறநகர், மைசூர், சாம்ராஜ் நகர், சிவமொக்கா உள்ளிட்ட பகுதிகளில் தமிழர்கள் அதிகம் வசிக்கின்றனர்.
இந்த நிலையில், நேற்று சிவமொக்கா என்.இ.எஸ் பகுதியில் தேர்தல் பிரசாரமாகத், தமிழ் அமைப்புகளின் ஒருங்கிணைவு கூட்டம் நடந்தது. இதில், கர்நாடக பா.ஜ.க தலைவர்கள் ஏராளமானவர்கள் பங்கேற்றனர். இதில் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலையும் கலந்துகொண்டார். தமிழ் அமைப்புகள் ஒருங்கிணைப்பு கூட்டம் என்பதால், தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் இசைக்கப்பட்டது. ஆனால் கர்நாடக முன்னாள் அமைச்சர் ஈஸ்வரப்பா அதை நிறுத்தக் கூறி, எதிர்ப்பு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து, பா.ஜ.க தலைவர் அண்ணாமலை மேடையில் இருக்கும்போதே, ‘வேண்டுமானால் யாராவது தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடலை பாடுங்கள். கேசட்டில் ஒலிபரப்ப வேண்டாம்’ எனக் கூறியதாகத் தெரிகிறது. அண்ணாமலை உட்பட யாரும் முன்வராததால் கன்னட வாழ்த்துப்பாடல் பாடப்பட்டது. இந்த விவகாரம் அங்கு ஒருங்கிணைக்கப்பட்ட தமிழர்களிடம் சலசலப்பை ஏற்படுத்தியது.
அதைத் தொடர்ந்து, தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “தமிழ்த்தாய் வாழ்த்தை இழிவுபடுத்தும் தன்னுடைய கட்சிக்காரர்களைத் தடுக்க முடியாத திரு. அண்ணாமலை அவர்கள், தமிழ் மக்களைப் பற்றி எப்படி கவலைப்படுவார். #ApologiseAnnamalai” எனப் பதிவிட்டிருக்கிறார். மேலும், தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் பாதியிலேயே நிறுத்தப்பட்டது குறித்து தமிழ் ஆர்வலர்கள் பலரும் கண்டனங்களைப் பதிவிட்டு வருகின்றனர்.
கவிஞர் வைரமுத்து தன்னுடைய ட்விட்டர் பதிவில்,”கர்நாடகா மேடையில் தமிழ்த்தாய் வாழ்த்து பாதியில் நிறுத்தப்பட்டது கண்டு இடிவிழுந்த மண்குடமாய் இதயம் நொறுங்கியது. ஒலிபரப்பாமல் இருந்திருக்கலாம்; பாதியில் நிறுத்தியது ஆதிமொழிக்கு அவமானம். கன்னடத்துக்குள் தமிழும் இருக்கிறது; திராவிடத்திற்குள் கன்னடமும் இருக்கிறது, மறக்க வேண்டாம்.” எனப் பதிவிட்டிருக்கிறார்.
இது தொடர்பான விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் விதமாகத் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில்,”அடித்துக் கொண்டு புரள அது திமுக மேடை இல்லை சகோதரி கனிமொழி அவர்களே. ஒவ்வொரு மாநிலத்தின் மாநில கீதம் பாடிய பிறகுதான் வேறு மாநிலத்தின் வாழ்த்துப்பாடல் இசைக்கப்படும் என்பது நியதி.
அந்த நியதியை தான் கர்நாடக மாநில முன்னாள் துணை முதல்வர் திரு ஈஸ்வரப்பா அவர்கள் சுட்டிக் காட்டினார். நமது தேசியக் கொடியை ஏற்றிய பின்னர், தேசிய கீதத்தை இசைக்க வேண்டும் என்று தெரியாத ஒரு தலைவரை வைத்துக்கொண்டு இதெல்லாம் உங்களுக்கு தேவையா?
“கன்னடமுங் களிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும்” என்ற வரியை தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலில் இருந்து நீக்கி மாநில பிரிவினையை விதைத்த சரித்திரம் அல்லவா உங்களது. தமிழ் மக்களை, உங்களிடமிருந்தும் தி.மு.க-வினரின் மலிவான அரசியலிலிருந்தும் காப்பாற்றுவதே எங்கள் ஒரே பணி… கவலை வேண்டாம்” எனப் பதிவிட்டிருக்கிறார்.