சென்னையில் குட்கா, பான்பராக் உள்ளிட்ட புகையிலை பொருட்களுக்கான தடை குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆலோசனை நடத்தினார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பல நிறுவனங்கள் தரமற்ற தண்ணீரை கேனில் அடைத்து விற்பதாக புகார் எழுந்துள்ளது. இதனையடுத்து தமிழ்நாட்டில் கேனில் அடைத்து விற்கப்படும் தண்ணீர் தரமாக உள்ளதா என கண்காணிக்க உத்தரவு பிறப்பித்துள்ளார். கோடை காலம் துவங்கியுள்ள நிலையில், குளிர்பானங்களை சோதனைக்கு உட்படுத்தப்படும். செயற்கை முறையில் பழங்கள் பழுக்க வைப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது.
கொரோனாவுக்கு பின் மாரடைப்பு பரவலாக அதிகரிப்பதால் அவசரகால மருந்து இருப்பை அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் உறுதி செய்ய வேண்டும். கொரோனாவுக்கு பின் மாரடைப்புக்கான வாய்ப்பு இருப்பதை உலக சுகாதார நிறுவனம் உறுதி செய்துள்ளது. மருந்துகள் இருப்பை இணை இயக்குநர்கள் உறுதிப்படுத்த வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.