புதுடெல்லி: ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் முன்னாள் செய்தித் தொடர்பாளரான அஜய் அலோக் இன்று (ஏப்.28) டெல்லியில் மத்திய அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவ் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்.
பாஜகவில் இணைந்ததற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அஜய் அலோக், “பாஜகவில் இணைவது சொந்த வீட்டிற்கு வருவது போல உள்ளது. இது அதிகமாக பேசுவதற்கான நாள் இல்லை. ஏழைகள் மற்றும் ஒடுக்கப்பட்டவர்களின் நலனுக்காக கட்சி பாடுபடுகிறது. மோடியின் நோக்கங்களுக்காக என்னால் 1 சதவீதம் பங்களிக்க முடியுமானால், அது எனக்கு கிடைத்த மிகப் பெரிய பாக்கியமாகும்” என்றார்.
மத்திய அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவ் கூறுகையில், “அவர் ஒரு சிந்தனையை வளர்த்தெடுக்க பெரும்பங்களிப்பைச் செய்துள்ளார். நாட்டின் நலனை முன்னிறுத்தி உழைக்க விரும்புகிறவர்களுக்கும், ஏழைகளுக்காக உழைப்பவர்களுக்காகவும் கட்சியின் கதவுகள் எப்போதும் திறந்திருக்கும்” என்றார்.
கடந்த ஆண்டு ஜூன் மாதம், கட்சிக்கு விரோதமாக இருப்பதாக கூறி ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவர் நிதிஷ் குமாரால் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட நான்கு பேரில் அஜய் அலோக்கும் ஒருவர். கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஆர்.பி.சி. சிங்கை மீண்டும் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்ய கட்சியின் தலைவர் நிதிஷ் குமார் மறுப்பு தெரிவித்த நிலையில், அவருக்கு அஜய் குமார் ஆதரவளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.