புதுடெல்லி: இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும், பாஜக எம்.பி.,யுமான பிரிஜ் பூஷன் சரண் மீது மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் குற்றச்சாட்டை கூறி போராட்டம் நடத்தி வரும் நிலையில் அவர் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட உள்ளதாக டெல்லி போலீஸார் உச்ச நீதிமன்றத்தில் கூறியுள்ளனர்.
பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது பிரபல மல்யுத்த வீராங்கனைகளான வினேஷ் போகத், சாக்சி மாலிக் உள்ளிட்டோர் பாலியல் குற்றச்சாட்டை சுமத்தி கடந்த ஜனவரி மாதம் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம் தலைமையில் 6 பேர் கொண்ட குழுவை மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் அமைத்தது. இந்தக் குழு விசாரணை நடத்தி தனது அறிக்கையை வழங்கிவிட்டது. எனினும் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்நிலையில், வினேஷ் போகத், சாக்சி மாலிக் உள்ளிட்ட வீராங்கனைகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை மீண்டும் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டத்தை தொடங்கினர். 5 நாட்களை தாண்டி போராட்டம் நடந்து வருகிறது. கபில் தேவ் உள்ளிட்டவர்கள் மல்யுத்த வீராங்கனைகளுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று குரல் எழுப்பி வருகின்றனர்.
மேலும் இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அமர்வில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் மற்றும் நீதிபதி பி.எஸ்.நரசிம்ஹா ஆகியோர் இடம்பெற்றனர்.
வழக்கில் டெல்லி காவல்துறை சார்பில் ஆஜரான, ஜெனரல் துஷார் மேத்தா, தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் மற்றும் நீதிபதி பி.எஸ்.நரசிம்ஹா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு , ”பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்படும் “ என்று தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து இந்த வழக்கை அடுத்த வாரம் வெள்ளிக்கிழமைக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.
உச்ச நீதிமன்றத்தில் டெல்லி போலீஸார் பதில் குறித்து மல்யுத்த வீராங்கனைகள் தரப்பில், “நாங்கள் உச்ச நீதிமன்ற கருத்தை மதிக்கிறோம். ஆனால் எங்களுக்கு டெல்லி போலீஸ் மீது நம்பிக்கை இல்லை. இந்த போராட்டம் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட வேண்டும் என்பதற்காக மட்டும் அல்ல. குற்றம் சாட்டப்பட்ட நபர் கைது செய்யப்பட வேண்டும். அதுவரை போராட்டம் தொடரும்” என்று தெரிவித்தனர்.