நாட்டின் முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் சேவை அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. இதுதான் இந்தியாவின் அதிவேக ரயில் என்று புகழப்பட்டு வருகிறது. முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டு Made in India திட்டத்திற்கு வலுசேர்க்கும் வகையில் சர்வதேச அரங்கில் கவனம் பெற்றுள்ளது. பிரதமர் மோடியே முன்னின்று அனைத்து ரயில் சேவைகளையும் தொடங்கி வைத்து வருகிறார்.
வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்
அடுத்த மூன்று ஆண்டுகளில் 400 வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்களை பயன்பாட்டிற்கு கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதுவரை 15 ரயில்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளன. அடுத்து எந்த மாநிலத்தில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் விடப்படும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு ஒடிசா என்ற பதிலை பலரும் கூறி வருகின்றனர். இம்மாநிலத்தின் முதல் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் இது என்பது கவனிக்கத்தக்கது.
பூரி டூ ஹௌரா
அதாவது, வரும் மே மாதம் முதல் மேற்குவங்க மாநிலம் ஹௌராவில் இருந்து ஒடிசா மாநிலத்தின் பூரி வரை இயக்கப்படவுள்ளது. சுமார் 500 கிலோமீட்டர் தூரத்தை 5 மணி நேரம் 30 நிமிடங்களில் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக ரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் ஒடிசாவிற்கான வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் சேவை குறித்து 2021ஆம் ஆண்டே அறிவிப்பு வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
உள்கட்டமைப்பு வசதிகள்
சமீபத்தில் தான் இந்த வழித்தடத்தில் உள்கட்டமைப்பு வசதிகளை ரயில்வே அதிகாரிகள் மேம்படுத்தினர். இதனால் ஏற்கனவே இயக்கப்பட்டு வரும் ரயில்கள் தனது வேகத்தை அதிகப்படுத்தியுள்ளன. இந்த நடவடிக்கை வந்தே பாரத் எக்ஸ்பிரஸிற்கு கூடுதல் வலு சேர்க்கும் வகையில் அமையும் எனக் கூறப்படுகிறது. அதிகபட்சமாக மணிக்கு 130 கிலோமீட்டர் வேகம் வரை ரயிலை இயக்க முடியும்.
சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
இந்த ரயில் சேவையால் சுற்றுலா பயணிகள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஏனெனில் பூரி கடற்கரை, ஜெகந்நாதர் கோயில், உலக பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாக கோனார்க், சிலிகா லகூன் ஆகிய பகுதிகளை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் இணைக்கும். இதில் மொத்தம் 14 ஏசி சேர் கார் பெட்டிகளும், 2 எக்ஸிக்யூடிவ் ஏசி சேர் கார் பெட்டிகளும் இடம்பெறும்.
இரண்டாவது ரயில்
மொத்தம் 1,128 பயணிகள் பயணம் செய்யலாம். இந்த ரயிலில் அதிநவீன வசதிகள் பலவும் இருக்கின்றன. பூரி – ஹௌரா ரயில் சேவையால் மேற்குவங்க மாநிலத்தில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸின் எண்ணிக்கை 2ஆக அதிகரித்துள்ளது. ஏற்கனவே ஹௌரா – நியூ ஜல்பைகுரி இடையில் கடந்த ஆண்டு டிசம்பர் 30 முதல் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் இயக்கப்பட்டு வருகிறது.