புதுடில்லி,பாலியல் புகாரில் சிக்கியுள்ள இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும், பா.ஜ., – எம்.பி.,யுமான பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்யப்படும் என, உச்ச நீதிமன்றத்தில் அரசு தரப்பில் நேற்று உறுதி அளிக்கப்பட்டது.
சர்வதேச மல்யுத்த போட்டிகளில் நம் நாட்டின் சார்பாக போட்டியிட்டு பதக்கங்களை வென்ற ஏழு பெண் மல்யுத்த வீராங்கனைகள், இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும், பா.ஜ., – எம்.பி.,யுமான பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது பாலியல் புகார் தெரிவித்து, கடந்த ஜன., மாதம், மூன்று நாள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த விவகாரம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்த, பாக்சிங் வீராங்கனை மேரி கோம் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.
இந்த குழு விசாரணையை முடித்து, மத்திய விளையாட்டு துறை அமைச்சகத்திடம் அறிக்கை சமர்ப்பித்தது.
இந்த அறிக்கையை வெளியிடவும், குற்றச்சாட்டுக்கு ஆளாகி உள்ள இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது வழக்குப் பதிவு செய்யவும் கோரி ஏழு பெண் மல்யுத்த வீராங்கனைகள், 24 முதல் புதுடில்லி ஜன்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
இதற்கிடையே, சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்ய உத்தரவிடும்படி, உச்ச நீதிமன்றத்தில் மனுவும் தாக்கல் செய்தனர். இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, சரண் சிங் மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்யப்படும் என உறுதி அளித்தார்.
மேலும், பாதிக்கப்பட்ட ஏழு பெண் மல்யுத்த வீராங்கனைகளுக்கு அச்சுறுத்தல் இருப்பதால் அவர்களுக்கு பாதுகாப்பு வழங்க உத்தரவிடும்படி, வீராங்கனைகள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் கோரிக்கை விடுத்தார்.
ஏழு வீராங்கனைகளில் 18 வயதுக்கு குறைவான சிறுமி ஒருவருக்கு உடனடியாக பாதுகாப்பு வழங்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். மற்றவர்களின் பாதுகாப்பு குறித்து, புதுடில்லி போலீஸ் கமிஷனர் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்