இந்திய மல்யுத்தக் கூட்டமைப்பின் தலைவரும், பா.ஜ.க எம்.பி-யுமான பிரிஜ் பூஷன் சரண் சிங்மீது பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்து இந்திய மல்யுத்த வீரர்கள், வீராங்கனைகள் நடத்திவரும் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்துவருகிறது. குறிப்பாக பிரிஜ் பூஷன் சரண் சிங்மீது எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்து விசாரணை மேற்கொள்ளப்படவேண்டும் என உச்ச நீதிமன்றம் வரை மல்யுத்த வீராங்கனைகள் வலியுறுத்திவருகின்றனர்.
இந்த விவகாரத்தில் கபில் தேவ், நீரஜ் சோப்ரா, சானியா மிர்சா உட்பட பல்வேறு விளையாட்டுத்துறைகளைச் சேர்ந்த வீரர்களும், வீராங்கனைகளும் `நாம் அவர்களுடன் நிற்கவேண்டிய நேரம் இது. பாரபட்சமின்றி இதில் விசாரணை நடத்தப்பட வேண்டும்’ என மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இதற்கிடையில் டெல்லி போலீஸார், “பிரிஜ் பூஷன் சரண் சிங்மீது மல்யுத்த வீராங்கனைகள் அளித்த புகாரின்பேரில், இன்றைக்குள் எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்யப்படும்” என உச்ச நீதிமன்றத்தில் இன்று தெரிவித்திருக்கிறது.
இந்த நிலையில் பிரிஜ் பூஷன் சரண் சிங், எஃப்.ஐ.ஆரை எதிர்கொள்ளத் தயார் என்றும், டெல்லி போலீஸ் சுயமாக விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றும் தற்போது தெரிவித்திருக்கிறார்.
இது தொடர்பாக ஊடகத்திடம் பேசிய பிரிஜ் பூஷன் சரண் சிங், “என்மீது எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்யப்படலாம் என்பது எனக்குத் தெரியும். ஆனால் நீதித்துறைமீது எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது. எதையும் எதிர்கொள்ளத் தயார். நான் மிகவும் நிதானமாக இருக்கிறேன். கூடிய விரைவில் அனைத்தும் தெளிவாகிவிடும். அதே சமயம், டெல்லி போலீஸ் இதில் சுயமாக விசாரணை மேற்கொள்ள வேண்டும். எனக்கு நம்பிக்கை இருக்கிறது. விரைவில் உண்மை வெளிவரும். விசாரணைக்கு என்ன வேண்டுமோ அத்தகைய முழு ஒத்துழைப்பையும் தருவேன். நான் எங்கும் ஓடவில்லை, வீட்டில்தான் இருக்கிறேன்” என்றார்.